Friday, January 30, 2009

முத்துகுமரன் - இறுதி குரல்

தீக்குளிப்பதற்கு முன் விநியோகித்த முத்துகுமரனின் இறுதி அறிக்கை

-----

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே...

உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.


-----

Monday, January 26, 2009

அயன் - ஹாரிஸால் உண்டு பயன்

ரஹ்மானின் இருப்பு தமிழ்நாட்டில் குறைந்ததால், இளைஞர்களுக்கு ஏற்பட்ட இசை தாகத்தை குறைத்து வைத்து கொண்டு இருப்பவர்கள் ஹாரிஸும், யுவனும். இதில் ஹாரிஸ் ரொம்ப செலக்டிவா இசையமைத்து வருகிறார். எட்டு வருஷங்களில் இருபத்தைந்து படங்களில் மட்டும் இசையமைத்து இருக்கிறார்.

முன்பு ஹாரிஸின் ஒவ்வொரு பாடலை கேட்கும் போதும், எனக்கு ஏதோவொரு ரஹ்மானின் பாடல் ஞாபகம் வரும். பின்னணி இசையிலும் ஒரே பிட், அவரது பெரும்பாலான படங்களில் வந்துள்ளது.

இருந்தாலும் நகர இளைஞர்களுக்கு பிடித்தமான படங்களிலும், பிடித்த இயக்குனர்களின் படங்களிலும் தொடர்ந்து இசையமைத்து வருவதால், இளைஞர்களை அதிகம் கவர்ந்தவராக இருக்கிறார். என்ன... வெரைட்டி காட்ட மாட்டேங்கிறார். கிராமத்து படம் எதுவும் இசையமைக்க வில்லை. இந்த விதத்தில் யுவன் பலமிக்கவராக தெரிகிறார். பருத்தி வீரன் போன்ற படங்களில் இசையமைத்து அதிக ரீச்சை பெற்றுள்ளார்.

படம் வெற்றியோ தோல்வியோ பாடல்களை வெற்றியடைய செய்து விடுவதால், இவர் பட பாடல்களுக்கு எந்த விளம்பரமும் தேவையில்லை. வாரணம் ஆயிரம் பாடல்கள் பெரும் வெற்றியை பெற்று படத்தின் ஒப்பனிங்குக்கும் உதவி புரிந்தது. அதை தொடர்ந்து இப்போது வெளி வந்து இருப்பது அயன் பாடல்கள்.

---

நெஞ்சே நெஞ்சே

கண்டிப்பாக உடனடியாக ஹிட் ஆகும் காதல் மெலடி பாடல். வைரமுத்துவின் வரிகளை ஹரிஷ் ராகவேந்திரா ஹையாகவும், மஹதி லோவாகவும் பாடிவுள்ளார்கள். நடுவே லேசா லேசா பாடல் ஏதோவொன்றை போல் இருந்தது.

"வெயில் காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கொண்டால் தான் காதல் ருசி ஆகும்"


விழி மூடி

ஹாரிஸ் சோக பாடல் என்றால் கார்த்திக்கை கூப்பிட்டு விடுவார் போல. அஞ்சலையை தொடர்ந்து இது. வேறு டைப். சூப்பராக உள்ளது. கடைசியில் விசில் அருமை.

"விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே"


நெஞ்சுக்குள் நுழைந்து

ஓயாயியே என்று தொடங்கும் இப்பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். இளைஞர்களை கவரும் பாடல். "அடியே கொல்லுதே" மாதிரி உள்ளது. திரும்பவும் பாருங்க. ஏதோவொரு ஒரு ஹாரிஸ் பாடலை நினைவுப்படுத்துகிறது.

"நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என்கையில் வளைந்து என்மீது மிதந்து சாலையில் நடக்கின்ற நிலவு நீ"


பள பளக்கும் பகலா நீ?

நவீன இசையில் பழைய தாளம். எம்.ஜி.ஆரின் தத்துவ பாடல் டைப். இடையில் ஹரிஹரனின் மென்மையான உச்சரிப்பும் ஹம்மிங்கும் இதமாக உள்ளது. ஆனால் முதலில் கேட்கும் போது பிடிக்க வில்லை. வரிகள் : நா. முத்துக்குமார்.

"இதுவரை நெஞ்சில் இருக்கும் சிறு துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து தொடு வானம் வரை போய் வருவோம்"


ஹனி ஹனி

மேற்கத்திய இசையில் கிளப் பாடல் போல் உள்ளது. மெதுவாக வேறு உள்ளது. தாம் தூமில் ஒரு கிளப் சாங் உண்டே? அதே போல். எனக்கு பிடிக்கவில்லை. பாதிக்கு பாதி ஆங்கிலம்.

---

ஏ.வி.எம். தயாரிப்பு, சூர்யா ஹீரோ, கே.வி.ஆனந்த் இயக்கம். இது போதாதென்று இப்போது பாடல்களை மூலை முடுக்கெல்லாம் 'பலவந்தமாக' கொண்டு சேர்க்க சன். தமிழக மக்கள் கண்டிப்பாக கேட்டாகவேண்டும்.

Friday, January 23, 2009

நொந்த பயணங்கள்

பயணங்களின் போது எடுத்த படங்களை பதிவாக போட்டபோது, சில நொந்து போன பயணங்களும் நினைவுக்கு வந்தது. சரி, அதையும் சொல்லிடுவோம்.

---

கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, கோயம்புத்தூரிலிருந்து தூத்துக்குடி சென்று கொண்டிருந்தேன். பஸ்சில் ஏறி உக்கார்ந்து விட்டேன். எனக்கு ஒரு நல்ல பழக்கம். பஸ்சில் ஏறினா நல்லா தூங்குவேன். இதனால் கஷ்டப்பட்டதும் உண்டு. அதை கடைசியில் சொல்றேன். கோவையிலிருந்து பஸ் கிளம்பி நல்லாத்தான் போயிட்டு இருந்திச்சி. நானும் வழக்கம் போல் தூங்கிட்டேன். காலையில ஒரு நாலு - அஞ்சு மணி இருக்கும். எந்திரிச்சி பார்த்த பஸ் ஒரு போலீஸ் ஸ்டேசன்ல நிக்குது.

எந்த ஊருன்னு பார்த்தா, தாராபுரம். அடப்பாவிகளா.

அப்புறம் என்னன்னு விசாரிச்சா பஸ்சுக்கு பெர்மிட் கிடையாதாம். டிரைவருக்கு லைசன்ஸ் கிடையாதாம். சுத்தம்.

பிறகு அவனுங்க இன்னொரு பஸ் அனுப்பி வச்சானுங்க. இனி எப்ப ஊருக்கு போயி சேருறது? யாராவது முக்கிய வேலையா, ஊருக்கு போறாங்கன்னா என்ன பண்ணுவாங்க? எனக்கு பரவாயில்லை. நான் திரும்பவும் புது பஸ்ல தூங்க ஆரம்பிச்சிட்டேன்.

----

இது சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதே கோயம்புத்தூரிலிருந்து சேலத்துக்கு நைட் பனிரெண்டு மணிக்கு பஸ் ஏறினேன். காலையில் வேலை இருந்தது. ஏறியாச்சு. டிக்கெட் எடுத்தாச்சு. இனி என்ன? தூங்க வேண்டியது தான்.

ஒரு மணி நேரம் கழிச்சு முழிச்சு பார்த்தேன். பஸ் கோயம்புத்தூர் இறுதியில் உள்ள கருமத்தம்பட்டியில் நின்று கொண்டிருந்தது. பஸ் பஞ்சராம்.

ஆரம்பிச்சுடாங்கடா! சரி எப்படியும் பஞ்சர் சரி பண்ணி கிளம்பிடுவாங்கன்னு நினைத்துக்கொண்டு மழை வேறு பெய்து கொண்டிருந்ததால் அப்படியே தூங்க ஆரம்பித்தேன். ஒரு அரை மணி நேரம் சென்று இருக்கும். ஒன்றும் நடந்தது போல் இல்லை. ஸ்டெப்னி இல்லையாம்.

அந்த பஞ்சர் ஆனா பஸ்சோடு ஒவ்வொரு டிப்போவாக சென்று ஸ்டெப்னி பிச்சை கேட்டு கொண்டு இருந்தார்கள். எல்லாம் அரசாங்கத்துடையது தான். அதற்குள் வட்டம், கோட்டம் என்று வேறுபாடு. பஸ் கண்டக்டர் சாலையில் போகும் ஒவ்வொரு பஸ்சையும் கைகாட்டி நிறுத்த முயன்று கொண்டிருந்தார். நிறுத்தினால் நேரமாகும் என்று பறந்து கொண்டிருந்தார்கள். சக பயணிகளும் இதுக்கு தான் பிரைவேட் கிட்ட கொடுக்கணும்ன்னு பொறுப்பா பேசி கொண்டு இருந்தார்கள்.

பணத்தை திருப்பி கொடுத்தால் நாமாகவே எதிலாவது ஏறி சென்று விடலாம் என்று கேட்டால் அதுவும் கண்டக்டர் தர மாட்டாராம். பாலிஸி சார். நல்ல பாலிஸி.

போனா போகுது என்று பின்பு நானே ஒரு பஸ்சில் ஏறினேன். சீட் இல்லாததால் பஸ் படிக்கட்டில் அமர்ந்திருந்தேன். வெளியே சில்லென்று காற்று. நல்ல அனுபவம். அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு சீட் கிடைக்க, உக்கார்ந்து பயணத்தை தொடர்ந்தேன்.

---

இது தமாஷான அனுபவம். அன்றும் அவசரமாக ஊருக்கு சென்று கொண்டிருந்தேன். நேரடி பஸ்சில் முன்பதிவு செய்யாததால், மாறி மாறி செல்வதாக திட்டம். நன்றி : தமிழக அரசு போக்குவரத்து கழகம். பெங்களூரில் இருந்து ஓசூர் சென்றவுடன் கிளம்பி கொண்டிருந்த ஒரு சேலம் பஸ் கிடைத்தது. சூப்பர்டா. ஆரம்பமே அசத்தலா இருக்கேன்னு கூட்டம் இல்லாத அந்த பஸ்சில் பயணத்தை தொடங்கினேன்.

ரொம்ப நேரம் ஆகியும் டிக்கெட் கொடுக்க கண்டக்டர் வரவில்லை. திரும்பி திரும்பி பார்த்து கொண்டேன். கண்டக்டர் போல் யாரும் இல்லை. என்னுடன் இருந்தவர்களும் திரும்பி பார்த்துகொண்டார்கள். சரி, கொஞ்சம் தூரம் சென்றவுடன் கண்டக்டர் எங்காவது ஏறி கொள்வார் என்று நினைத்து கொண்டேன்.

பின்னால் இருந்தவர்கள் குசுகுசுவென பேசி கொண்டார்கள். டிரைவரிடம் கேட்டு விடலாம் என்று முடிவு செய்து ஒருவர் முன்னால் சென்று டிரைவரிடம் 'கண்டக்டர் எங்கே?' என்று கேட்டார். அதை கேட்டவுடன் டிரைவர் போட்டார் பாருங்க, ஒரு பிரேக். கண்டக்டரை ஓசுரிலே விட்டுவிட்டு வந்து விட்டாராம்.

டிரைவர் வயதானவர். அவரிடமும் செல்போன் இல்லை. கண்டக்டரிடமும் செல்போன் இல்லை. 'நல்லாதானே போயிட்டு இருந்திச்சி' என்றிருந்த எனக்கு கடுப்பு. ரோட்டையே பார்த்து கொண்டிருந்த டிரைவர், வண்டியை ஓசூருக்கு திருப்பும் முடிவுக்கு வந்தார். ஏற்கனவே இருபது - இருப்பத்தைந்து கிலோ மீட்டர் வந்திருந்தோம். 'இது ஆவுற கதையில்லை' என்று இறங்கி கொண்டேன். பின்பு, சூளகிரி என்ற ஊருக்கு ஒரு டப்பா பஸ்சில் ஏறி, கிருஷ்ணகிரிக்கு வந்து சேலத்திற்கு சென்றேன்.

அதற்கு பின், பஸ்சில் ஏறியவுடன் கண்டக்டர் இருக்கிறாரா என்று பார்த்துதான் ஏறுகிறேன். நீங்களும் அப்படியே பண்ணுங்க. டிரைவரையும் பார்த்துக்கோங்க. :-)

---

இது என் தூக்கத்தால் நொந்த கதை. கோவையிலிருந்து பெங்களூர் பயணம். ஓசூர் தாண்டியவுடனே சிறிது நேரத்தில் இறங்க வேண்டும். பெங்களூர் மைய பகுதியான மெஜஸ்டிக் சென்று விட்டால், திரும்ப ஒரு மணி நேரம் பயணப்பட வேண்டும். அதனால், எப்போதும் ஓசூர் தாண்டியவுடன் இறங்க ரெடியாகி விடுவேன்.

அந்த சமயம், கோவையில் எனக்கு நல்ல அலைச்சல். மதியமே பஸ் ஏறி விட்டேன். அது பெங்களுருக்கு இரவு பத்து மணிக்கு வந்து விடும் என்று நினைத்தேன். ஆனால் நேரமாகிவிட்டது. அலைச்சல் காரணமாக எனக்கு நல்ல உறக்கம் (இல்லாட்டியும்...).

ஓசூரில் விழிக்கவில்லை. கண் முழித்து பார்த்தால் மெஜஸ்டிக். மணி பன்னிரண்டு. அந்நேரம் எங்கள் பகுதிக்கு (எந்த பகுதிக்கும்) செல்ல எந்த பஸ்சும் இருக்காது. வேற என்ன பண்ண? ஆட்டோ பிடித்து வந்தேன். பத்து மணிக்கு மேல அவன் சொல்றதுதான் கட்டணம்.

ப்ரிபேடில் ஒரு போலீஸ்காரர் தான் ஏற்றிவிட்டார். இருந்தும், நான் வீடு வர கொடுத்த பணம், கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் வந்ததை விட அதிகம்.

Thursday, January 22, 2009

பயணங்கள் - புகைப்படப் பதிவு

சில பயணங்களின்போது சுட்ட படங்கள்...

மேலே வானம். சுற்றி கடல். எங்கே போய்விட முடியும்?




ஜன்னல் வழி உலகம், மங்கலாக.



எப்ப நான்?



சென்றுவிடலாம் எத்தொலைவும், பாதையில் நம்பிக்கையிருந்தால்.



இன்பம் உனக்கும். அதனால் பேரின்பம் எனக்கும்.



பயணங்கள். முடிவதில்லை.

Monday, January 19, 2009

அஜித் ரசிகர்களே, இதெல்லாம் ஓவரு!



பெரிதாக காண க்ளிக்கவும்.

பொங்கல் படங்கள் - படையல்

தமிழ் சினிமா நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, போல!. தீபாவளிக்கு வந்தது ரெண்டு-மூணு படங்கள். இப்ப பொங்கலுக்கு வந்தது மூணு படங்கள். கடைசி நேரத்தில சதி பண்ணி கேப்டன் படத்தை வர விடாம பண்ணிட்டாங்க.

வில்லு

இந்த படத்துக்கு ஏகப்பட்ட நெகடிவ் ரிவ்யுஸ். அதனால்தான் என்னமோ, என்னைய ரொம்ப பாதிக்கவில்லை. இதுக்கு மேல விஜய் படத்தில என்ன எதிர்பார்க்க முடியும்? விஜய்க்கு முப்பத்தி அஞ்சு வயசு நடந்திட்டு இருக்குன்னு சொன்னா நம்ப முடியுமா? மனுஷன் என்னா ஆட்டம் போடுறாரு. விஜய் கஷ்டப்படாம நடிக்குறாருன்னு சொல்ல கூடாது. ஆனா, பில்லா மாதிரி கோட்-கூலிங் கிளாஸ் போட்டுட்டு பாரின்ல நடக்குறதுதான், நமக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

பிரபுதேவா இது இந்திய ஜேம்ஸ்பாண்ட் படம்ன்னு சொல்லியே எல்லோர்கிட்டயும் வேலை வாங்கி இருப்பாரு போல. டி.எஸ்.பி. பாடல்களுக்கு துள்ளலான இசையையும், பின்னணிக்கு அதிரடி இசையும் கொடுத்துள்ளார். ரவிவர்மன் கேமரா வழக்கம் போல் பறக்கிறது.

முதல் பாதி படம் நல்லா இருந்தது. ஏன்னா, அப்ப கதையே ஆரம்பிக்கல. வடிவேலு காமெடிக்கு அரங்கம் அதிர்ந்தது. இரண்டாம் பாதியில் வரும் மாடு பைட் ஏற்கனவே இன்டர்நெட்டில் வந்தது. வெட்டி செலவு. அப்புறம், முடிக்கும்போது படத்துல கதை இல்லைன்னு யாரும் சொல்லிட கூடாதுன்னு ஏதோ சொல்ல வாராங்க. வாரிட்டாங்க.

பிரகாஷ் ராஜ்தான் அப்பா விஜயை கொல்கிறார். ஆனால் அவரை போலவே இருக்கும் மகன் விஜயை அவருக்கு அடையாளம் தெரியவில்லையாம். விஜய், மேக்கப்புல அவ்ளோ வித்தியாசம் காட்டி இருக்காரு. :-)

ராஜ்கபூர் ரெண்டு சீன்ல வராரு. அதுல ஒண்ணு, இருபது வருஷங்களுக்கு முன்ன உள்ள பிளாஸ்பேக். அப்ப எப்படி இருந்தாரோ, அதேபோல் இருபது வருஷம் கழிச்சும், இளமையா இருக்காரு.

படிக்காதவன்

ஒரு ஆபத்தான கருத்தை தாங்கி வருது. எனக்கு தெரிஞ்சவுங்க வீட்டுக்கு போயிருந்தேன். அந்த வீட்டுல உள்ள பையன், இந்த வருஷம் +2 பரீட்சை எழுத போறானாம். அவுங்க அம்மா அவன ஒழுங்கா படிக்க சொல்ல, அவன் "வராத படிப்ப வா வான்னு சொன்னா, எப்படி வரும்?"ன்னு டயலாக் அடிக்குறான். இதுக்கும் அவன் நல்லா படிக்குற பையன். ஒழுங்கா படிக்காததையும் ஒரு ஹீரோயிஸ செயலா மாத்திட்டு வருறது கண்டனத்திற்குரியது. ("படிக்காதவன்தான் மத்தவங்களுக்காக யோசிப்பான். படிச்சவன் அவனுக்காக மட்டும்தான் யோசிப்பான்"... டேய்...)

தனுஷுக்கு ஏன் அவர் மேல இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை? உருப்படாத தறுதலை கேரக்டரா தொடர்ந்து நடிச்சிட்டு வராரு.

சர்க்கரை பொங்கலா? வெண் பொங்கலா?ன்னு தெரியாத மாதிரி ஆக்சனையும் காமடியையும் கலந்து கட்டி அடிச்சி இருக்காங்க. விவேக் நடிச்சது வடிவேலு நடிக்க இருந்த ரோலாம். அப்படியே நாய் சேகர், என்கவுண்டர் ஏகாம்பரம் பாடி லேங்குவேஜ் எல்லாம் வந்துட்டு போகுது. இது வடிவேலு ஸ்டைலா? சுராஜ் ஸ்டைலா? இத்தினி வில்லன்கள வச்சிக்கிட்டு, டப்பிங் இல்லாமலே தெலுங்குல ரிலிஸ் பண்ணலாம்.

கிளைமாக்ஸ் ஒரு சொதப்பல். ரன், சண்டைகோழியில் பார்த்தது. அதுவும் சண்டை முடிஞ்சதுக்கப்புறம், அடியாட்கள் கைதட்டுவது படத்தின் இறுதியில் உள்ள காமெடி காட்சி.

காதல்னா சும்மா இல்ல

வில்லு பார்க்க எழுபது ரூபா. படிக்காதவனுக்கு ஐம்பது. இதுக்கு முப்பது தான். டிக்கெட்டுலயே படத்தோட பட்ஜெட் தெரிஞ்சு போச்சு.

இந்த படம் ஒரு மினி அன்பே சிவம். அன்பே சிவம் பார்த்து தெலுங்குல எடுத்து இருப்பாங்க. திரும்ப, அத பார்த்து இங்க எடுத்துட்டாங்களோ?

ரவி கிருஷ்ணாவை முதல்ல பார்க்கும்போது வேற யாரையாவது போட்டு இருக்கலாமோ?ன்னு தோணிச்சின்னு. அப்புறம் போக போக, அவரு பேசுற வசனங்கள் சிரிக்க வைத்தது.

அந்த புது ஹீரோ, கமலினி முகர்ஜி இருவருமே எந்த குறையும் இல்லாம நல்லாவே நடிச்சி இருந்தாங்க. வேட்டையாடு விளையாடுவில் சரியா கவனிக்காதவுங்க இதில் கவனிச்சிக்கோங்க.

ரெண்டு பாட்டு நல்லா இருக்கு. ராஜ் டிவில கேட்டதாலவோ என்னவோ? ராஜ் டிவி எல்லாம் பார்க்குறீங்களான்னு கேட்காதிங்க. வித்யாசாகர், மணிஷர்மா, மூர்த்தி இப்படி மூணு இசையமைப்பாளர்கள். எதுக்கு யார் இசைன்னே தெரியல.

எம்.எஸ்.பாஸ்கர் வருற அந்த பத்து நிமிட காட்சியை பார்த்து தியேட்டர்ல இருந்த எல்லோரும் குலுங்கி குலுங்கி சிரிச்சோம். தியேட்டர்ல என்னை சேர்த்து மொத்தம் இருபது பேர்.

Friday, January 16, 2009

ஆனந்த விகடனில் என் பதிவு :-)

இந்த வார ஆனந்த விகடனில் என்னுடைய பதிவு வந்துள்ளது. அபி அப்பா, செந்தழல் ரவி ஆகியோரது பதிவுகளுடன்.

இச்செய்தியை பகிர்ந்து கொண்ட வெங்கட்ராமனுக்கு நன்றி.





பெரிதாக்க கிளிக்கவும்.

ஆன்லைன் அக்கௌன்ட் இருக்குறவுங்க இங்கே போயி பாருங்க...

தவிர, இந்த வார குமுதத்திலையும் பதிவர்கள் கவுண்டவுன் போட்டு இருக்காங்க. அது பற்றிய முரளிகண்ணனின் பதிவு.

பத்து இடங்களை பிடித்த பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

இனி என்னையும் 'ஆனந்த விகடன்' புகழ் சரவணகுமரன் என்று சொல்லி கொள்ளலாம். ஹி ஹி... :-)

Friday, January 9, 2009

அதிக ஹிட் கொடுத்த முன்னணி ஹீரோ யார்?

கடந்த நாலு வருடங்களில் அதிக ஹிட் கொடுத்த முன்னணி தமிழ் நடிகர் யார் தெரியுமா? சரி, ஒவ்வொருத்தவங்களா பார்ப்போம்.

ரஜினி. 2004 இருந்து நடித்து வெளிவந்த படங்கள், சந்திரமுகி, சிவாஜி, குசேலன். இதில், குசேலன் தவிர மற்ற இரண்டும் வெற்றி படங்கள். ஓகே, வரிசையில் வச்சிக்கலாம்.

கடந்த நாலு வருடங்களில் கமல் நடித்த படங்கள், வசூல் ராஜா, மும்பை எக்ஸ்பிரஸ், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம். மும்பை எக்ஸ்பிரஸ் மட்டும் தான் பிளாப். ஸோ, அவரையும் ஆட்டத்துல சேர்த்துக்குவோம்.

அடுத்து, யாரை பார்க்கலாம். விஜயகாந்தா? விஜயா? சீனியாரிட்டிப்படி கேப்டன பார்ப்போம். கேப்டன் நடிச்ச படங்கள், கஜேந்திரா, நெறஞ்ச மனசு, பேரரசு, சுதேசி, தர்மபுரி, சபரி, அரசாங்கம். இதுல எது ஹிட்'ன்னு யாராச்சும் சொல்லுங்க?

விஜயின் நடித்த (என்னது! விஜய் நடிச்சாரான்னு கேட்க கூடாது :-)) படங்களின் எண்ணிக்கை, பதினொன்னு. இதுல நாலு படங்கள் ஹிட்டுன்னு சொல்லலாம். இப்போதைக்கு, இவர்தான் அதிக ஹிட் கொடுத்தது. அடுத்தவங்கள பார்ப்போம்.

பத்து படங்கள் பண்ணியிருக்காரு, அஜித். வரலாறு, பில்லா மட்டும் தான் அவர் கொடுத்த இரு வெற்றி படங்கள். நெக்ஸ்ட்.

நாலு வருஷத்துல நிறைய படங்கள் நடித்தது சத்யராஜ்தான். இருபது படங்கள். ஆனா பாருங்க, இதுல ஒண்ணு கூட பெரிய வெற்றி படம் இல்லை. பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு எல்லாம் வெற்றி படங்களா?

கார்த்திக்க பார்த்து ரொம்ப நாளாச்சி. இந்த டைம்ல விக்ரம் கொடுத்த ஒரே ஹிட், அந்நியன். சூர்யாவோடது, கஜினியும், வேலும்(???).

இளையதிலகம் பிரபு நடிச்சது ஒன்பது படங்கள். அதுல மூணு படங்களை தவிர மத்தது எல்லாம் ஹிட். எல்லாம் ஓரளவுக்கு ஹிட் ஆன படங்கள். வசூல் ராஜா, சந்திரமுகி, சம்திங் சம்திங், தாமிரபரணி, பில்லா, சிலம்பாட்டம். இந்த படங்கள்ல இவரு மெயின் ஹீரோ இல்லன்னாலும், இப்படங்களின் ஹீரோக்களின் முந்தைய படங்கள் அனைத்தும் பிளாப்கள். இவங்களுக்கெல்லாம் பிரேக் கொடுத்தது, இவர் கூட நடிச்ச படங்கள் தான். இப்பலாம், தமிழ் சினிமாவில் கனமான வேடங்களை ஏற்க இவர விட்ட ஆளு இல்லை.

அதனால, அதிக ஹிட் கொடுத்த முன்னணி தமிழ் நடிகர், பிரபுதான். :-))

Thursday, January 8, 2009

உயிர் பாகிஸ்தானுக்கு

பாகிஸ்தான். நமக்கு அடிக்கடி தொல்லை கொடுக்குற பக்கத்து வீட்டுக்காரன். ஏன் இப்படி பண்றான்? அப்படி நம்மள பத்தி என்ன நினைச்சிக்கிட்டு இருக்கான்? இப்படி என்னுள் இருந்த பல கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளது, முஷரப்பின் சுயசரிதையான "IN THE LINE OF FIRE" புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, "உடல் மண்ணுக்கு". மொழி பெயர்த்திருப்பவர், நாகூர் ரூமி.

சுயசரிதை, ஒரு மனிதனின் வாழ்நாள் டைரி. சுயசரிதைகளில் உள்ள விசேஷம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடந்த, மற்றவர்களுக்கு தெரியாத, சில விஷயங்கள் அவனுக்கு தான் தெரியும். அது போன்ற முக்கிய விஷயங்கள் அவர்கள் எழுதும் நூலில் வர வாய்ப்புள்ளது. குறை : நல்ல விஷயங்களை மட்டுமில்லாமல் எல்லா விஷயங்களையும் சொல்லும் நேர்மை, துணிவு அனைவருக்கும் இருக்காது. முஷரப், இந்த புத்தகத்தை எழுதியதன் நோக்கம், தான் சார்ந்த சில நிகழ்வுகளின் உண்மை நிலையை (?) எடுத்துரைக்கவும், தன் பக்க நியாயத்தை எடுத்து சொல்லவும் என்றே நினைக்கிறேன்.

முஷரப் பாகிஸ்தான் தலைமை பொறுப்பில் இருந்த போது, அவரை பற்றி ஒரு கொடூரமான உருவகமே எனக்கு இருந்தது. இப்போது பாகிஸ்தானில் நடப்பதை பார்க்கும் போது அவரே பரவாயில்லை என்று தோன்றுகிறது. இந்த புத்தகத்தின் மூலம் அவரை மட்டும் இன்றி, அவரது நாட்டை பற்றியும், அந்நாட்டின் ராணுவத்தை பற்றியும், அரசியல் நிலைமையை பற்றியும், அரசு இயந்திரத்தை பற்றியும், அந்நாட்டின் வெளியுலக தொடர்பை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். பாகிஸ்தான் கதை மட்டுமில்லாமல், பங்களாதேஷ் கதையும் ஒரளவுக்கு உள்ளது. அவரே, இப்படி அவரது வார்த்தைகளில் சொல்கிறார்.

"ஆரம்பத்திலிருந்தே, எனது கதையும், பாகிஸ்தானின் கதையும் ஒன்றாகிப் போனது."

-------

கதையை தாத்தா காலத்திலிருந்து ஆரம்பிக்கிறார். டெல்லியில் பிறந்தவர், தேச பிரிவினையின் போது குடும்பத்துடன் பாகிஸ்தான் சென்று அங்கு வளர்கிறார். சிறிது காலம் துருக்கியில் வாழ்ந்திருக்கிறார்கள். அந்நேரங்களில், எல்லா பிள்ளைகளை போலத்தான் வாழ்ந்திருக்கிறார். கோலி குண்டு விளையாடியிருக்கிறார். திருட்டுத்தனமாக மரத்திலேறி பழங்கள் பறித்திருக்கிறார். லவ் பண்ணியிருக்கிறார் (பெயிலியர் தான்). பின்பு, ராணுவ
கல்லூரியில் சேர்ந்த பிறகு, சராசரி வாழ்க்கை சடுகுடு வாழ்க்கையாகியிருக்கிறது.

ராணுவ கல்லூரியில் சிறப்பாக பயின்று, ராணுவத்திலும் கடமை உணர்ச்சியுடன் பணியாற்றியுள்ளார். சில சேட்டைகளையும் செய்திருக்கிறார். பல பொறுப்புகளில் ஜொலித்த முஷரப், ஒரு கட்டத்தில் ராணுவ தலைவராக பொறுப்பேற்கிறார். அப்போது, பிரதமராக இருந்த நவாஸ் செரிப்புடன் ஏற்பட்ட உரசலால் பற்றி கொண்டு எரிந்திருக்கிறார். பிரதமர் பதவியிலிருந்து நவாஸை எறிந்திருக்கிறார்.

அதன் பின், உலகத்தின் பார்வை இவர் மேல். பாகிஸ்தான் அதிபர் என்றொரு சிக்கல் பதவி. அதனுடன் சேர்ந்து கொண்டு வலுகட்டாயமாக ஏற்பட்ட அமெரிக்காவுடன் கூட்டணி என்றொரு புலி வால் பொறுப்பு. இதற்கு நடுவே, அரசியல் கட்சிகளுடன் மோதல், நாட்டின் பொருளாதார சீர்குலைவு, நீதி துறையுடன் சண்டை, அதற்கு மேல் தாலிபான், அல்-கொய்தாவால் அவரை சுற்றி வைக்கப்படும் குண்டுகள் என்று ஏகப்பட்ட பிரச்சினைகள். அப்பப்பா...

ஒரு நாளாவது தலைவலி இல்லாமல் தூங்கி இருப்பாரா என்பது சந்தேகமே!

----------

இப்படி தினமும் அசாதாரணமாக வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வை எழுத்தாக்கியிருக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, வங்காள தேசம் பிளவு, இந்தியாவுடன் போர், ராணுவ புரட்சி, தீவிரவாதத்திற்க்கெதிரான போர், தாலிபான் உறவு என இவர் வாழ்வை தொட்டு சென்ற சம்பவங்கள் எல்லாம் மறக்க முடியாத, மறைக்க முடியாத வரலாறு.

பிரிவினையின் போது, ரயில் பயணத்தில் ஏற்பட்ட அனுபவம் அந்நாட்களின் துயரத்தை உணர்த்துகிறது.

"வரும் வழியில் (இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு) பழிவாங்கும் எண்ணம் கொண்ட சீக்கியர்களாலும் ஹிந்துக்களாலும் அவர்கள் (முஸ்லிம் குடும்பங்கள்) சித்திரவதை செய்யப்பட்டார்கள். எதிர்த் திசையில், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்த பல ஹிந்துக்களும் சீக்கியர்களும், பதிலுக்கு முஸ்லிம்களால் கொலை செய்யப்பட்டார்கள்"

ராணுவ அதிகாரி என்றால் வெடுக்கென்றுதான் இருப்பார்களா?

"ராணுவத்தால் ஒரு மனிதனின் எத்தனையோ குணங்களை மாற்ற முடியும். ஆனால் தொன்று தொட்டு வரும் உணர்ச்சிகளை ஒன்றும் செய்ய முடியாது"

ஆனாலும், நிச்சயதார்த்தம் முடிந்தபின் வருங்கால மனைவி அனுப்பிய லெட்டரில் எழுத்து பிழையை திருத்தியிருக்கிறார். இவரை என்னன்னு சொல்ல?

கார்கில் போரின் போது தங்கள் நாட்டில் இருந்து வெளிப்படையான, பெரும்பான்மையான ஆதரவு வராததை கண்டு வருந்துகிறார்.

"இந்திய ஊடகங்கள் அவர்களது வெற்றியை மிகைப்படுத்திக் காட்டியன. எங்களது அரசியல் தலைமைக்கோ எந்த வித ஆட்சித்திறமையும் இல்லை. கார்கில் விஷயத்தில் நாட்டை ஒருங்கிணைக்க எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை."

இந்தியா பாகிஸ்தானை தாக்கியது. அப்பாவி மக்கள் இறந்தார்கள் என்பது போன்ற குற்றசாட்டுகள் இந்தியனாகிய நம்மை தடுமாற தான் வைக்கும். உண்மையா, பொய்யா என்று தெரியவில்லை. முஷரப் வேறு என்ன சொல்லுவார்? இம்மாதிரியான கருத்துகளை இந்தியாவில் இருந்து கொண்டு படிப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செயல் இல்லையே?

1965 போரில் இரண்டு நாடுகளுக்கும் வெற்றி இல்லை என்கிறார். ஆனால், இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி மூக்கை உடைத்ததாகவும், அதிகமான நில பிரதேசங்களை பிடித்ததாகவும் கூறுகிறார்.

கொழும்பில் இருந்து கராச்சிக்கு வந்து கொண்டிருந்த முஷரப்பின் விமானத்தை தரையிறங்க நவாஸ் ஷெரிப் செய்த சதியை ஒரு அத்தியாயத்தில் விவரித்துள்ளார். அவர் அந்த நிமிடங்களில் அனுபவித்த சங்கடங்களை வார்த்தைகளில் அப்படியே இறக்கி வைத்துள்ளார்.

"’பாகிஸ்தானில் எங்கும் நீங்கள் தரையிறங்க முடியாது. பாகிஸ்தானின் வான் எல்லையைவிட்டு உடனே சென்று விட வேண்டும்.” அந்த பதிலை எங்களால் நம்ப முடியவில்லை. என்னிடமிருந்து விடுபடுவதற்காக, எங்கள் அனைவரையும் (விமானத்தில் 198 பயணிகள்) கொல்ல அவர்கள் முயன்றுகொண்டிருந்தார்களா என்ன?"

நவாஸ் ஷெரிப்பை தூக்கியெறிந்து விட்டு, ஆட்சியை அமுக்கியது அடிதடி மசாலா படம்தான். முஷரப் இல்லாமலே, எதுவும் சொல்லாமலே அவருக்காக செயல்பட்ட ராணுவம், அவர் ராணுவத்தின் மேல் கொண்ட ஆளுமையை காட்டுகிறது. ராணுவமும் போலிஸும் மோதி கொண்டால் யார் ஜெயிப்பார்கள்? சிறுபிள்ளைத்தனமான கேள்வியா இருக்கா? எனக்கும் படிக்கும்போது விநோதமாகத்தான் இருந்தது.

"பிரதமர் வீடுக்கு ராணுவம் வந்து சேர்ந்தபோது, ஒரு கும்பலை எதிர்ப்பார்த்துக் காத்திருந்ததைப் போல, தேவையான அளவு ஆயுதம் தாங்கிய போலீஸார் அங்கு நிறைந்திருந்தனர். அத்தகைய ஆயுதக் காவல் படை பார்ப்பவர்களைப் பயமுறுத்தும் விதத்தில் இருந்தது. அந்தப் படையைப் பார்ப்பவர்கள் குறைந்தது ஒருமுறைக்கு இருமுறையாவது யோசிக்கவேண்டும்."

தாலிபான், உமர், பின்லேடன் பற்றியெல்லாம் நிறைய தகவல்களை சொல்லி உள்ளார். அமெரிக்காவுக்காக நிறைய ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை பிடித்திருப்பதாகவும், அதற்காக அமெரிக்காவிடம் இருந்து நிறைய பரிசுகளை பெற்றிருப்பதாகவும் சொல்லி பெருமைபட்டு கொள்கிறார். ஒரு பக்கம் பொருளாதார துணையுடன் அமெரிக்கா, இன்னொரு பக்கம் அமெரிக்க எதிர்ப்புணர்வுடன் பாகிஸ்தான் மக்கள் என்று இடிப்பட்டும் காட்டிக்கொள்ளாமல் ஆட்சி நடத்தியிருக்கிறார்.

தீவிரவாதத்தை எதிர்க்கப்போய், ஒரு கட்டத்தில் தீவிரவாதத்திற்க்கே குறியாய் மாறி, அதனால் அவர் எதிர்க்கொண்ட சம்பவங்களும், அதை அவர் குறிப்பிடும்போது சில ஆங்கில படங்கள், மணிரத்னம் படங்கள், ஷங்கர் படங்கள் எல்லாம் கண்முன் வந்து செல்கின்றன.

"இதெல்லாமும் நடக்க ஒரு விநாடிகூட ஆகியிருக்காது. என் தலையை நான் திருப்புவதற்குள் காதடைக்கும் ஒரு பெரும் சத்தம் கேட்டது. மறுபடியும் எனது கார் ஆகாயத்தில் இருந்தது."

-------------

முஷரப், பொதுவாகவே தீவிர இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு ஆதரவளிப்பவராக தெரியவில்லை. மேற்கத்திய கலாசாரத்திற்கு சார்பாகவே இருப்பதாக தெரிகிறது. பாகிஸ்தான் மக்கள் பற்றிய அவர் கருத்து இது.

"அடிப்படையில், பாகிஸ்தான் மக்கள் மத உணர்வு மிக்கவர்களாகவும், மிதவாதிகளாகவும்தான் இருக்கிறார்கள். இந்த துணைக்கண்டத்தில் முஸ்லிம்களுக்காக ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம் நாடுதான் பாகிஸ்தான். அந்த மக்களில் ஒரு சிறு பகுதியினர்தான் தீவிரவாதிகளாக இருக்கின்றனர். இந்தப் பிரிவினர் இணக்கமற்ற, பழைமைவாத, சகிக்கமுடியாத மதக்கருத்துக்களைக் கொண்டுள்ளனர். அக்கருத்துக்களை அடுத்தவர்மீது திணிக்கும்போது, பிரச்சினை ஏற்படுகிறது. இந்தச் சிறு பிரிவு எப்போதுமே உணர்ச்சிவசப்படுபவர்கள். எளிதாகப் பயங்கரவாதக் கருத்துக்களைத் திணித்து இவர்களை பயங்கரவாதிகளாக மாற்றிவிட முடியும்."

ரொம்ப சிம்பிளான, அதே சமயம் நேர்மையான கருத்து என்று இதை கருதுகிறேன்.

புத்தகத்தில், சிறுவயதிலிருந்து தான் கடந்து வந்த பல மனிதர்களை நினைவு கூர்கிறார். அவர்களின் தற்போதைய நிலையையும் சொல்கிறார். இது இடைவிடாமல் அவர் அவர்களுடன் கொண்டிருக்கும் தொடர்பை காட்டுகிறது.

இந்த புத்தகம் மூலம் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையே உள்ள உறவு முறை தெரியவருகிறது. இந்தியா பற்றிய அவர்களின் எண்ணங்கள் வெளி வருகிறது. பாகிஸ்தான் என்றொரு அடி மேல் அடி வாங்கும் நாட்டின் தொடர் போராட்டம் விளங்குகிறது.

இந்த நூலை மொழிபெயர்த்து இருப்பது, நாகூர் ரூமி. ஆங்கிலத்தில் இருந்தால் என்னால் இந்த அளவுக்கு ஆர்வமாக படித்திருக்க முடியுமா? என்பது சந்தேகம் தான். நன்றி, நாகூர் ரூமி. மொழிப்பெயர்ப்பு செய்யும் போது சில கட்டுபாடுகள் இருக்கும். அதற்குள் சிறப்பாக செயல்பட்டு வாசிப்பவர்களை சலிப்படையாமல் வாசிக்க வைத்து வெற்றியடைந்திருக்கிறார் நாகூர் ரூமி. வாழ்த்துக்கள்.

புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.

படிச்சி முடிச்சத்துக்கப்புறம் ஒரு மாதிரியா இருக்கு. உடனே, மானேக்‌ஷா பத்தின புக்கை படிக்கணும்.

Monday, January 5, 2009

சிம்பு டிரெண்ட் செட்டரா?

சிம்பு, அவர் நடிக்குற எல்லா படத்துலயும் ஏதாச்சும் வித்தியாசமா பண்ணனும்ன்னு நினைப்பாரு. அதாவது, கதையிலையோ, நடிக்குற நடிப்புலயோ இல்லை. அவர் தலைமுடியில. மீசையில. கிருதாவுல. இப்படிப்பட்ட விஷயங்கள்ல.

இப்ப, சிலம்பாட்டத்துக்காக ஒரு கெட்டப்புல தலையில கொண்டையும், இன்னொரு கெட்டப்புக்காக முறுக்கு மீசையுமா நடிச்சு இருக்காரு. முறுக்கு மீசைன்னா சும்மா இல்லை. ஒவ்வொரு பக்கமும் இரண்டு கிளை மீசைகள் இருக்கு. அது ரெண்டையும் விரலால நீவி விடுறது இந்த படத்தின் 'விரல்' ஸ்டைல்.

நீங்களே பாருங்க.



நல்லா இருக்குல்ல?

இன்னும் நாலு நாளுல நாலு பேர இப்படி பார்க்கலாம். அட, நம்ம பசங்க கூட பரவாயில்லை. கஜினி மொட்டைன்னு லூசுத்தனமா மண்டையில கோடு போட்டுக்கிட்டு இந்த ஹிந்தி பசங்க சுத்துறத பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு. சூர்யா, கஜினி படத்துல நடிக்கும்போது, யாரும் பார்த்துட கூடாதுன்னு கூச்சப்பட்டுக்கிட்டு தொப்பி போட்டுக்கிட்டு சுத்திட்டு இருந்தாரு. அமீர்கான் பப்ளிக்’ல வந்தாலும் வந்தாரு. அத ஸ்டைல் ஆக்கிடாங்க.

சரி. சிம்பு மேட்டருக்கு வருவோம். இது சிம்பு ஸ்டைல்ன்னு அந்த மாதிரி வர நினைக்குறவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிக்கிறேன். இது சிம்பு ஸ்டைல் இல்லை. அவரும் ஒருத்தர பார்த்து காப்பி அடிச்சதுதான்.

யாருன்னு தெரியுமா? ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிஞ்சவுருதான்.


-


-


-



-



-



-



-



-



-




சூப்பர் ஸ்டாரே இவர பார்த்து காப்பி அடிக்கும்போது, லிட்டில் சூப்பர் ஸ்டார் அடிச்சா, அது என்ன பெரிய விஷயமா?

நன்றி : IndiaGlitz, TamilWire

பெங்களூர் - ஓசூர் ரோடு - பறக்கும் ஹைவே

பெங்களூரில் இருந்து ஓசூர் போகும் வழியில் பாதி தூரத்தில் உள்ளது, எலக்ட்ரானிக் சிட்டி. எஸ்.எம்.கிருஷ்ணா ஆட்சிக்காலத்தில் எலக்ட்ரானிக், ஐ.டி. கம்பெனிகளுக்கு சலுகை கொடுத்து ஆரம்பிக்கப்பட்ட இடம் இது. இதில் கம்பெனிகள் அதிகம் ஆக ஆக, இந்த சாலையில் பயணப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. இந்த சாலைதான் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் இருந்து பெங்களூர் வரும் வாகனங்களுக்கும் நுழைவு வாயில். இது போதாதா, வாகன நெரிசலுக்கு? அடிக்கடி இந்த ரோட்டுல போயிட்டு வந்தா காசநோய், தோல் வியாதி, பிரஷர் எல்லாம் வரும். அப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சி பொறுமை குணமும் கூடிடும்.




இதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ஓசூர் ரோடு எலிவேட்டட் ஹைவே பிராஜக்ட். ரோட்ட நல்லா விரிவாக்கி, ஒரு பாலத்தை கட்டுறதுதான் பிளான். பாலம் ஒரு கிலோமீட்டர், ரெண்டு கிலோமீட்டர் இல்ல, கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டருக்கு ஒரே பாலம். மத்திய அரசின் நெடுஞ்சாலை துறை, கர்நாடக அரசு மற்றும் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள நிறுவனங்களின் கூட்டமைப்பு போன்றவற்றின் கூட்டணியில் உருவாக்கப்படும் திட்டம் இது. ஆரம்பிச்சு வைச்சது மன்மோகன் சிங். 450 கோடி ரூபாய் செலவு. கட்டுனதுக்கப்புறம் வண்டியில போறவன்கிட்ட புடுங்கிடுவாங்க.



இந்த பாலம் கட்டுற விதம், எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. மண்ணு, சல்லி, கம்பி, சிமெண்ட் எதுவும் ரோட்டுல கிடக்குறது இல்ல. எல்லாத்தையும் தனிதனியா வெவ்வேறு இடங்களில் செஞ்சு, இங்க வந்து பிக்ஸ் பண்ணிடுறாங்க. முதல்ல தூணை வைக்குறாங்க. அப்புறம் துண்டு துண்டா ஒட்டி பாலத்தை உருவாக்கிடுறாங்க.



ரெண்டு தூணுக்கிடையில் இவ்வளோ தூரத்தில எப்படி இத்தனை பாகங்களை சேர்த்து ஒண்ணா வைக்குறாங்க? அதுவும் எப்படி இப்படி நிக்குது?ன்னு எனக்கு ஆரம்பத்துல ஏகப்பட்ட சந்தேகம்.



மேட்டர் ஒண்ணுமில்லை. ஊசி நூலுல பாசி மணி கோர்க்குற மாதிரி, பாலம் கட்டுற டெக்னாலஜி இது.கண்ணுக்கே தெரியாத கம்பிதான் மெயினு.




இப்ப, ரோட்ட ஒரளவுக்கு பெரிசாக்குனதுக்கே கொஞ்சம் டிராபிக் குறைஞ்ச மாதிரி தான் இருக்கு. நாலு இடங்களில் சாலையை கடக்க, சப்வேயும் கட்டி இருக்காங்க. மத்தியான வெயில் நேரத்தில பாலத்துக்கு கீழேயே போனா, பத்து கிலோமீட்டருக்கு வெயில இருந்து தப்பிச்சிடலாம். மழை பெயும்போதும் அப்படியே. ஆனா, நான் மாட்டேன்ப்பா.



கீழே ரோட்டுல ஆறு லேன். மேலே பாலத்துல நாலு லேன். இது தவிர, ரெண்டு பக்கமும் சர்வீஸ் ரோடு. முக்கால் மணி நேர பயணத்தை, பத்து நிமிசமா இது குறைச்சிடுமாம். இந்த வகையில ரோடு பிளஸ் பாலம் கட்டுறது இதுதான் இந்தியாவில் முதல்முறைன்னு சொல்லிக்கிட்டாங்க.




ஆரம்பத்தில் ரெண்டு வருஷத்தில் முடிப்பதாக பிளான். நீண்டுக்கொண்டே செல்கிறது. இந்த வருடம் முடிந்துவிடும் என்றே தோன்றுகிறது.





இந்த பாதை முழுமையான செயல்பாட்டுக்கு வந்தபின், வாகன நெரிசல் இருக்காதுன்னு நினைச்சிட்டு இருக்காங்க. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு? பாலத்துக்கு மேல சிக்னல் வச்ச ஊருதானே இது?