Sunday, December 14, 2008

பூயூம்ம்ம்ம்ம்.... மகாபாரதம்...

டாக்டர் ஷாலினி ஒரு பேட்டியில் இன்றைய குழந்தைகளின் மனநிலை மாற்றங்களுக்கு ஒரு காரணம் சொன்னார். முன்பு இருந்தது போல் இல்லாமல், இப்போது குழந்தைகளுக்கு கதை கேட்கும் வாய்ப்பு குறைகிறது. கதைகள் பொழுதுபோக்குகளுக்கு மட்டுமில்லாமல், அவர்களின் நினைவாற்றலையை, கற்பனைத்திறனை அதிகரிக்கும். அதைவிட முக்கியம், நல்ல விஷயங்களை, நல்ல பண்புகளை, ஒழுக்கத்தை கதைகள் மூலம் போரடிக்காமல் சொல்லலாம். இந்த வாழைப்பழத்துக்குள் மாத்திரை வச்சு கொடுப்பாங்களே, அதைப்போல் அறிவுரைகளை கதைகள் மூலம் மறைமுகமாக சொல்லலாம். எந்த குழந்தையும் கதை கேட்க மாட்டேன் என்று சொல்லாது. ஒரே கதையை கொண்ட விக்ரமன் படங்களை தமிழக மக்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பது போல், குழந்தைகளும் சலிப்பில்லாமல் ஒரே கதையை கூட பல முறை ஆர்வமுடன் கேட்பார்கள். கதைகளில் ஆரம்பித்துத்தான் வாசிக்கும் பழக்கத்தை தொடங்க முடியும்.

இன்றைய பெரும்பாலான குழந்தைகளின் பொழுதுபோக்குகள், சுட்டி டிவி, கார்ட்டூன் நெட்வொர்க், பொகோ மற்றும் இதர பல சானல்கள். இன்னும் சில வீடுகளில், அவர்களும் மெகாசீரியல் பார்க்கிற கொடுமைகள் நடக்கிறது. இதன் மூலம் பல தவறான விஷயங்களையே பிள்ளைகள் கற்கிறார்கள். இதிலிருந்து அவர்களை கதைகள் சொல்லிதான் மீட்க முடியும். நல்ல கதைகளுக்கா, நம்மூரில் பஞ்சம்? ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் அவசியமே இதுதான் என்பது என் கருத்து. இப்ப எங்க போயி, இதிகாசம் படிக்குறது? அதுவும், நமக்கு போரடிக்காமல், நமக்கு புரிகிற மாதிரி, குழந்தைகளுக்கு புரிகிற மாதிரி. ஐயா சந்திரசேகரனின் “இது உங்கள் குழந்தைகளுக்கான மகாபாரதம்” புத்தகம் உங்களுக்கு கைக்கொடுக்கும்.

ஐயா சந்திரசேகரன் என்பவர் ஓவிய கலை தெரிந்த ஒரு பெண் எழுத்தாளர். அவர் தன்னை ஐயா பாட்டி என்றே அறிமுகப்படுத்துகிறார். நவீன பாட்டி. சில்ட்ரன் லிட்டரேச்சர் எனப்படும் குழந்தைகள் இலக்கியம் கற்று தேர்ந்தவர் என்பதால் மகாபாரதத்தை குழந்தைகளுக்கு புரிகிறபடி, விரும்பும்படி சொல்லியிருக்கிறார். இன்றைய குழந்தைகளுக்கு ஏற்றப்படி சுத்த செந்தமிழில் சொல்லாமல், எளிமையாக தேவையான இடங்களில் ஆங்கிலம் கலந்தே சொல்லிருக்கிறார். இது ஒரு வகையில் குறை என்று தோன்றினாலும், நடைமுறையில் செந்தமிழ் சிறு குழந்தைகளுக்கு புரிவதில்லை. குறிப்பாக, தமிழகத்திற்கு வெளியே வசிக்கும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு.

உதாரணத்துக்கு, மகாபாரதத்தைப் பற்றியே என்ன, எப்படி சொல்லுறாங்கன்னு பாருங்க.

“மகாபாரதக் கதையே குழந்தைகளெல்லாம் எப்படி நடந்துகிட்டா நல்லதுன்னு சொல்ற கதைதான். உங்களை மாதிரி குட்டீஸெல்லாம் சின்ன வயசிலே என்னெல்லாம் செய்யக் கூடாதுன்னு கூட மகாபாரதம் சொல்லுது.

எல்லாக் காலத்துலேயும் நல்லவங்களும் இருப்பாங்க. கெட்டவர்களும் இருப்பாஙக. அவங்களுக்குள்ளே சண்டை வந்தால் நல்லவங்களுக்குத் தான் சாமி ப்ரைஸ் கொடுக்கிறதுன்னு பார்த்தோம் இல்லையா?”


ஸோ. கதை சொல்ற வேலையை ஐயா பாட்டி ரொம்ப சுலபமா ஆக்கிட்டாங்க. அது மட்டும் இல்ல. சின்ன சின்னதா ஒவ்வொரு பக்கங்களிலும் படங்கள் கொடுத்திருக்கிறார்கள். அதைக் காட்டி கொண்டே கதை சொல்லலாம்.

எனக்கு மகாபாரதம் பற்றி தெரிந்தது ரொம்ப கம்மி. கிருஷ்ணர், அர்ஜூனன், பாண்டர்கள், துரியோதனன்,திரௌபதி கதைகள் பற்றி தான் தெரியும். பதிவுகளில் ஆங்காங்கே சில இடங்களில் படித்திருக்கிறேன். உபயம் - சில பகுத்தறிவு பதிவர்களின் பக்கங்கள். :-). இந்த புத்தகத்திலேயே மகாபாரதத்தை சுருக்கிதான் தந்திருக்கிறார்கள் என்றாலும் ஏகப்பட்ட கதைகள் உள்ளன.

அம்மா சொல்லுறத கேட்கணும், குருவுக்கு மரியாதை கொடுக்கணும், பொறுமையின் அவசியம், பிறர் சொத்துக்கு ஆசைப்படாமல் இருப்பது போன்ற நல்ல விஷயங்களை, அறிவுரைகளை ஒவ்வொரு கதைகளின் மூலமாக சொல்கிறார்கள்.

“வாண்டுக்குட்டிகளா! பகவத் கீதையிலே கிருஷ்ணர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? எல்லோரும் தங்களோட கடமைகளை ஒழுங்கா செய்யணும். செய்த கடமைக்கு, பதிலா யார்கிட்டேயும் எந்த உதவியையும் எதிர்பார்க்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்.

இது எல்லோரும் பின்பற்றவேண்டிய புத்திமதி இல்லையா பட்டூஸ்?”


ஆசிரியருக்கு கதை சொல்லும் போது, குழந்தைகளுக்கு என்ன தோணும் என்று தெரியும் போல? அவரே சமயங்களில் கேள்வி கேட்டு பதிலும் சொல்கிறார். இது போல,

“பாண்டவர்கள் தர்மமா நாட்டை ஆண்டார்கள். அதனால காட்டிலே இருக்கிற மிருகங்கள், பறவைகள் கூடப் பேச முடிஞ்சது. ‘ஹை... பாட்டீ! எங்ககிட்டயே டூப் விடறியே! மிருகம், பறவைகளால எப்படிப் பேசமுடியும் அப்படீன்னுதானே கேட்கறீங்க வாண்டுகளா?’ நான் ரீல் விடலே குட்டீஸ்!

புராணக் கதைகள்லே மிருகங்கள், பட்சிகள் எல்லாம் மனுஷா மாதிரியே பேசும்! இந்தக் கதையைப் படிங்க. பாட்டி சொல்றது உண்மைன்னு உங்களுக்கே புரியும்.”


ஒரு கதை போல் இதை படிக்கும்போது, இதில் உள்ள திருப்பங்கள், சில காரணங்களால் கோர்க்கப்படும் சம்பவங்கள் கமர்ஷியல் சினிமாவிற்கே உரியது. உதாரணத்திற்கு, கச்சனின் குரு சுக்ராச்சாரியார். சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி கச்சனை விரும்புகிறாள். ஒரு சூழ்நிலையில் கச்சன் குருவின் வயிற்றுக்குள் சென்று விடுகிறார். ஒரு மேஜிக் செய்து குருவின் வயிற்றை கிழித்து வெளியே வந்துவிடுகிறார். அதன் பின், தேவயானியை திருமணம் செய்து கொள்ள கச்சன் மறுக்கிறார். ஏனென்றால் சுக்ராச்சாரியாரின் வயிற்றில் இருந்து வருவதால், அவருக்கு மகன் போல் ஆகிவிடுகிறாராம். அதனால் தேவயானிக்கு சகோதரன் முறையாகிவிடுகிறதாம்.

பாக்யராஜ் தனது ஹிட் திரைக்கதை சூட்சமத்தை ஒருமுறை இப்படி சொன்னார். அதாவது, நடக்கவே நடக்காது என்று தோணுகிற மாதிரியான ஒரு முடிவை நோக்கி ரசிகனை நம்பும்படியாக கொண்டு செல்வதுதான் வெற்றிகரமான திரைக்கதையின் ரகசியம் என்றார். மகாபாரதம் முழுக்க அப்படி நிறையவே இருக்கிறது. யாராவது ஒரு காம்ப்ளேக்ஸான வரம் அல்லது சாபம் கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு அது எப்படி நடக்கும் என்று தோன்றும். கதையில் ஆர்வம் உண்டாகும். எப்படியோ அது நடந்துவிடும்போது அதை ரசிப்பார்கள்.

இதில் சொல்லப்பட்டிருக்கும் கதைகளை இன்னும் கொஞ்சம் எடிட் செய்து, தணிக்கை பண்ணி சொல்லியிருக்கலாம். அசல்ட்டா ஒன்றுக்கு மேற்பட்ட கல்யாணங்களை செய்யுறது, பீஸ் பீஸா வெட்டி நாய்க்கு போடுறது, எரித்த சாம்பலை போட்டு ஒயின் குடிக்குறது போன்றவைகளை தவிர்த்திருக்கலாம். குழந்தைகளுக்கு சொல்லப்படுகிற மகாபாரதம் என்பதால் எதையையும் முழுமையாக சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாதே? நல்ல கருத்துக்கள் தானே போய் சேர வேண்டும்.

குழந்தைகளூடன் பேசுவது என்பது எதற்கும் நிகரில்லா ஒரு தனி அனுபவம். அதுவும் கதை சொல்லும் வாய்ப்பு, வாழ்நாளில் சில காலங்களில் தான் அமையும். அமையும் வாய்ப்பை தவறவிடாதீர்கள். அப்படி தங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்ல விரும்பும் பெற்றோர்களுக்கு இந்த புத்தகம் உதவும். படித்து சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாசித்தாலே போதும். ஒரு பாட்டி பேரன் - பேத்திகளுக்கு கதை சொல்லும் தொனியிலேயே எழுத்து நடை உள்ளது. வாசிக்கும் ஆர்வம் இல்லாத பெற்றோர்களும் தங்கள் பெற்றோர்களுக்கு வாங்கி கொடுத்தால், சேர வேண்டிய இடத்தில் கதைகள் சென்று சேர்ந்து விடும். சிறு குழந்தைகளின் பிறந்தநாளுக்கு ஒரு பெர்ஃபக்ட் கிஃப்ட் இது.

திரைப்பட படைப்பாளிகளும் இதை படித்து பார்க்கலாம். மணிரத்னம் போல் உங்களுக்கும் படத்திற்கான கதைகள் கிடைக்கலாம். :-)

புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஏனென்றால் சுக்ராச்சாரியாரின் வயிற்றில் இருந்து வருவதால், அவருக்கு மகன் போல் ஆகிவிடுகிறாராம். அதனால் தேவயானிக்கு சகோதரன் முறையாகிவிடுகிறதாம்.//



ஆணுக்கு ஆப்ரேஷன் பண்ணி...........

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி SUREஷ்