எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தனிப்பட்ட கல்வி சார்ந்த ஒரு வேலை இருந்தது (அஸைன்மெண்ட் எழுத வேண்டி இருந்தது). அலுவலக வேலையால் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. அதை ஆரம்பிக்கவே முடியவில்லை. என்னென்னே புரியல்லை. அதை முடிக்க ஒரு வாரம்தான் இருந்தது. ஊருக்கும் போக வேண்டி இருந்தது. ஊரிலும் பல வேலைகள் இருந்தது. சரி, பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு லாப்டாப்பை எடுத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பினேன். இரவு ரயிலை பிடிக்கும் முன்பு, ஒரு ஹோட்டலில் சாப்பிட்டேன். அந்த ஹோட்டலில் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை பில் கட்டும் இடத்திற்கு அருகே வைத்திருந்தார்கள். சில புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்று சிபி கே. சாலமனின் ”துள்ளிக் குதி”.
மறுநாள் காலை ஊர் சேரும் முன்பு படித்து முடித்திருந்தேன். ஆரம்பிக்கும் போது சாதாரணமாக இருந்தாலும், ஏற்கனவே படித்த சங்கதிகள் இருந்தாலும், ரொம்பவே பூஸ்ட்-டப் கொடுத்தது. ஊரில் இருந்து கிளம்புவதற்கு முன்பு, நினைத்திருந்த வேலைகளும் முடிந்தது. ஊரில் இருந்த வேலைகளும் முடிந்திருந்தது. எனக்கு அப்போதிருந்த மனச்சோர்வை ஓழித்ததில் கண்டிப்பாக அந்த புத்தகத்திற்கு பெரும் பங்கு இருந்தது. அதன் பின், அந்த புத்தகத்தை டல்லாக இருந்த எனது இரு நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருந்தேன். இருவருமே மாற்றம் கண்டு புத்தகத்தை புகழ்ந்தார்கள்.
அந்த அனுபவமே இந்த புத்தகத்தை தேர்வு செய்ததற்கு காரணம். நான் பேச்சிலர்தான். ஆனால் குடும்பத்தோடு இருக்கிறேன். இந்த புத்தகம் ஊரைவிட்டு, உறவை விட்டு, மேன்ஷனிலோ, தனி அறைகளிலோ வாழும் ஜீவனுக்களுக்கானது மட்டும் இல்லை. ஒவ்வொரு மனிதனும், கல்யாணமானவரோ, கல்யாணமாகாதவரோ, வாழ்வின் சில சமயங்களில் தனிமையை சந்திப்பார்கள். அவர்களுக்குமானது.
உலகமயமாக்க கொள்கையின் விளைவு, பெருத்துபோன நகரங்கள். நாடேங்கும் உள்ள மக்கள், இருக்கும் சில பெரிய நகரங்களில் வாழ்க்கை போராட்டதிற்க்காக தஞ்சமடைகிறார்கள். முன்பின் பார்த்திராதவர்களுடன் சேர்ந்து அறையெடுத்து தங்குவது கட்டாயமாகிறது. அதன்பின், உறவுரீதியாக, உளவியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, வாழ்வியல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். அவை அனைத்திற்கும் தீர்வு சொல்கிறது, இந்த புத்தகம்.
சிபி சாலமன், தீர்வு சொல்கிறேன் அறிவுரை சொல்கிறேன் என்று எந்த இடத்திலும் பொறுமையை சோதிக்கவில்லை. தோழமையுடன், நிகழ்கால கதையுடன், நகைச்சுவையுடன் வாசிக்கும் ஆர்வத்தை கூட்டிக்கொண்டே தீர்வை சொல்கிறார். ஆவுடையப்பன் என்ற கதாபாத்திரம் மூலம் சூழ்நிலைகளை விளக்கி புத்தகததை ஆரம்பிக்கிறார். திரும்ப, ஆவுடையப்பனை வைத்தே ஆங்காங்கே பிரச்சினையை விளக்கி என்ன செய்யலாம், என்ன செய்திருக்கலாம் என்கிறார்.
இந்த புத்தகத்தில், அவர் சமர்ப்பிக்கும் முதல் பக்கத்திலேயே நம்மை ஈர்க்கிறார்.
லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கும்
ஹாஸ்டல்வாழ் அன்பர்களுக்கும்
படிப்பாளிகளுக்கும்
மேன்ஷன் புகழ் மகாராஜாக்களுக்கும்
திருமணமானாலும் பணி நிமித்தம் நகரத்தில்
தனியாக வாழும் திருவாளர்களுக்கும்
இந்தப் புத்தகம்
தண்ணீர் தெளித்து விடப்படுகிறது.
அத்தியாயத்தின் தலைப்பில் கூட சிரிக்க வைக்கிறார். ஒரு அத்தியாயத்தின் தலைப்பு - என் டான்டெக்ஸ்தான், எனக்கு மட்டும்தான்!
ரூம் தேடுவதில் ஆரம்பிக்கும் பேச்சிலரின் சோக கதை, உணவு, பணக்கடன், ஜட்டிக்கடன், ரூம்மேட், சுற்றத்தாருடனான உறவு என்று நீண்டுக்கொண்டே செல்லும். எதையும் விடாமல் எல்லாவற்றையும் தொட்டு செல்கிறார், சிபி சாலமன். ஒவ்வொரு இடத்திலும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் மறக்காமல் சொல்கிறார். அது மட்டும் இல்லாமல், நமக்கு தெரியாத உபயோகமான தகவல்களும் இருக்கிறது. உதாரணத்துக்கு ஒன்று,
முகவரி சான்றிதழ் வாங்க இன்னொரு வழியும் இருக்கிறது. அருகிலுள்ள தபால் அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அதிகாரியைப் பார்த்து, முகவரி சான்றிதழுக்கு மனு செய்யலாம். அந்த அதிகாரி நம் வீட்டுப் பகுதிக்கு நேரே வந்து விசாரித்து, நம்மைப் பற்றிய விவரங்களை அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்து பின்னர் முகவரிச் சான்றிதழைக் கொடுப்பார். இந்த சான்றிதழ் சட்டபூர்வமானது. மிகவும் உதவிகரமானது.
ஆசிரியர் சமைத்து சாப்பிடுவதற்கு பரிந்துரை மட்டும் செய்யாமல், அதற்கான முழுமையான திட்டத்தையும் கொடுக்கிறார். சமையல் குறிப்பு உள்பட. ரகளை ரசம், சகலகலா சாம்பார், பர்ஃபெக்ட் பொங்கல் என ஜாலியாக பேச்சிலருக்கு சமைக்க சொல்லி கொடுக்கிறார். ரசத்துக்கான குறிப்பில் இதுவும் இருக்கிறது.
மேற்சொன்ன ரசத்தில் எந்தக் கட்டத்திலும் உப்பு சேர்க்கவே சொல்லவில்லை. மறந்துவிட்டது. இப்படித்தான் அடிக்கடி நிகழும். மறக்காமல் சேர்த்து கொள்ளவும்.இறுதியாக ஒரு நீதி : ரசம் வைப்பதென்பது காதல் கவிதை எழுதுவதைவிட சுலபமான விஷயம்.
மீன் குழம்பு, கருவாட்டு குழும்பு, முட்டை குழம்பு, சைவ காரக்குழம்பு என்று நான்கு வரியில் நாலு ஐட்டத்துக்கு ஐடியா கொடுக்கிறார். :-)
மனித உறவுகளை, தொடர்புகளை பற்றி உளவியல் ரீதியாக ஆசிரியர் கூறியது, இந்த புத்தகத்தில் என்னை ரொம்ப கவர்ந்தது. கருத்து வேறுபாடு வருவதற்கு காரணமாக இருக்கும் வாக்குவாதத்தை பற்றி இப்படி அலசுகிறார்.
சொல்லப்போனால் எல்லோரிடமும் நமக்கு அக்கறை வருவதில்லை. யாரை நம் மனத்துக்குப் பிடிக்கிறதோ அவர்கள் மேல்தான் அக்கறை வைக்கிறோம். அந்த நபர் செய்யும் செயல்களில் ஏதேனும் தவறாக நம் மனத்துக்குப் பட்டால், உரிமை எடுத்து நம் கருத்தை முன்வைக்கின்றோம். அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றே நம்புகிறோம். அந்த எதிர்பார்ப்பு பொய்க்கும்போது நம் மனம் வருத்தப்படுகிறது. வருத்தம் கோபமாகிறது. கோபம் எதிர்க்கோபத்தைச் சந்திக்கையில் பகை பற்றிக்கொள்கிறது.
ஒரு குழந்தை அதனைப் பெற்றவர்களுக்கு எப்போதுமே அழகு. மற்றவர்களுக்கு அழகாகத் தோன்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாக் குழந்தைகளும் அதனைப் பெற்றவர்களுக்கு மட்டுமே அழகு. சில குழந்தைகளைத் தவிர. கருத்துகளும் குழந்தைகளைப் போலத்தான்.
என் நண்பர்கள் இருவர் ஒரு வருடத்திற்கு முன்பு அடித்துக்கொண்டார்கள். இப்புத்தகம் அப்போதே கிடைத்திருந்தால் அந்த சண்டையை தடுத்து நிறுத்தியிருக்கலாம். அடித்துக்கொள்ள இருப்பவர்கள், ஒருமுறை இப்புத்தகத்தை வாசிக்கவும்.
இந்த புத்தகம் ஆண், பெண் - இருபாலருக்கும் ஏற்புடையதாக, உபயோகமாக இருக்குமென்றாலும் புத்தகம் முழுவதும் ஆண்களை மையப்படுத்தியே இருக்கிறது. கொடுத்திருந்த உதாரணக்கதைகள் அனைத்திலும் ஆண்களே. இது படிக்கும் பெண்களை, ஆண்கள் அளவுக்கு, சுலபமாக சென்றடையுமா என்பது என் சந்தேகம்.என்னை பொறுத்தவரை, ஆண்களை விட பெண்களிடையேதான் இம்மாதிரி பிரச்சினை அதிகம் இருப்பதாக கருதுகிறேன்.
அறைகளில் நண்பர்களுடன் தங்கி இருக்கும் ஒவ்வொருவருக்கும் இப்புத்தகத்தை நான் இப்பதிவின் மூலம் பரிந்துரைக்கிறேன். கண்டிப்பாக அவர்களின் ஏதோவொரு பிரச்சினையை இப்புத்தகம் தீர்க்கும். பிரச்சினை இல்லாவிட்டாலும், உங்கள் வாழ்வை திறம்பட வாழ, நெறிப்படுத்த உதவும். குடும்பத்தோடு இருப்பவர்களும் இந்த புத்தகத்தை வைத்திருக்கலாம். வீட்டில் உள்ளவர்கள் உங்களை வீட்டுக்கு காவல் வைத்து விட்டு வெளியூர் சென்றால், நீங்களும் பேச்சிலர்தான். தனிகாட்டு ராஜாதான்.
வீட்டுக்காரர் பொண்ண லவ் பண்ணலாமா?
நண்பர்களுக்கு எப்போது கடன் கொடுக்கலாம்?
பீர் அடிக்கலாமா?
போரடிக்குதுன்னு மால் போலாமா?
உயிர் தோழனுக்கு கல்யாணமானா, என்ன செய்ய வேண்டும்?
அறை, உணவு செலவுகளுக்கு தனியாக சிக்கிக் கொள்ளாமல் மற்றவர்களையும் கோர்த்துவிடுவது எப்படி?
நண்பர்கள் இருக்கும்போது, நைட் பூரா உங்க ஆளுடன் கடலை போடலாமா?
எல்லா கேள்விகளுக்கும் இதில் பதில் இருக்கிறது.
புத்தகம் வாங்குவதற்கு இங்கே செல்லவும்.
3 comments:
"இந்த புத்தகம் ஆண், பெண் - இருபாலருக்கும் ஏற்புடையதாக, உபயோகமாக இருக்குமென்றாலும் புத்தகம் முழுவதும் ஆண்களை மையப்படுத்தியே இருக்கிறது. கொடுத்திருந்த உதாரணக்கதைகள் அனைத்திலும் ஆண்களே. இது படிக்கும் பெண்களை, ஆண்கள் அளவுக்கு, சுலபமாக சென்றடையுமா என்பது என் சந்தேகம்.என்னை பொறுத்தவரை, ஆண்களை விட பெண்களிடையேதான் இம்மாதிரி பிரச்சினை அதிகம் இருப்பதாக கருதுகிறேன். "
உங்கள் நல்ல மனம் வாழ்க... :)
இப்புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை, படித்தபிறகு பெண்களுக்கு மிகப் பொருந்தும் என்று எவற்றை கூறினீர்கள் என்று மீண்டும் எழுதுகிறேன்...
//உங்கள் நல்ல மனம் வாழ்க...//
நன்றி :-)
//படித்தபிறகு பெண்களுக்கு மிகப் பொருந்தும் என்று எவற்றை கூறினீர்கள் என்று மீண்டும் எழுதுகிறேன்//
கண்டிப்பாக படித்துவிட்டு உங்கள் கருத்தை கூறவும்...
Post a Comment