Monday, December 29, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 9

இன்னைக்கி அவன் நேத்து சொன்ன மாதிரி மெயின் ரோட்டுக்கே போயிடலாம்ன்னு மெயின் ரோட்டுல இறங்கிட்டோம். காலையிலே அவ்வளவா டிராபிக் இல்லை. திரும்ப வரும்போது வந்திடும்.

அவன் கடை இருக்குற தெருவுல உள்ள பண முதலைகள பத்தி சொன்னான். பார்க்கத்தான் தெரு சாதாரணமா இருக்கு. ஏகப்பட்ட கோடிஸ்வரர்கள் இருக்காங்களாம். பணத்த என்ன பண்றதுன்னு தெரியாம்ம சினிமாவுல எல்லாம் போட்டு தொலைக்குறவுங்க பலர் இருக்காங்களாம். நான் கூட பயந்து போற மாதிரியான முகத்தோட சில சினிமா பேனர்கள் பாத்திருக்கேன்.

அந்த மாதிரியான ஒரு குடும்பத்தோட கதையை சொன்னான். பழைய தமிழ் சினிமா மாதிரி இருந்திச்சி. ஒரு ஊர்ல ஒரு கோடிஸ்வரராம் (அந்த முட்டு சந்துலதான்). அவருக்கு ஒரு கேடி பையன்னாம். எப்பவும் போதையிலயே சுத்துவானாம். அந்த பக்கம் இருக்குற, ஒரு சாப்ட்வேர் கம்பெனி முன்னாடி நின்னு வர போற பொண்ணுகள எல்லாம் பார்ப்பானான். பிடிச்ச பொண்ண தள்ளிட்டு போயிடுவானாம். ஒரு பெரிய வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணி வச்சாங்களாம். அப்புறம் அதையும் ஏதோ பிரச்சினையில கொன்னுட்டாங்களாம். அந்த பையனும் எய்ட்ஸ் வந்து செத்துட்டானாம்.

சே. இவன் உண்மையை சொல்றானா? இல்ல, கதையை அடிச்சி விடுறானா? என் முகத்தை பார்த்தா என்னன்னு தெரியுது?

இவனுக்கு ரியல் எஸ்டேட் ஆளுங்க கூட சகவாசம் இருக்குறதால, பண பரிமாற்றம் நடக்குற இடங்களுக்கு எல்லாம் போயிருக்கானாம். மூட்டையில லட்சக்கணக்கான பணத்தோட, ரவுடிகளோட காருல போன கதையை சொன்னான். கதை நல்லா இருந்திச்சு!

மெயின் ரோட்டுல ஒரு இடத்துல யூ டர்ன் அடிச்சேன். அடிக்கும்போது வண்டி ஆப் ஆகிடுச்சி. கூட்டம் இல்லாததால அவசரமோ, பதட்டமோ இல்லை. ஆன் பண்ணி திருப்பிட்டு வந்துட்டேன்.

வரும்போது, நிறைய பஸ், கார்களெல்லாம் போயிட்டு இருந்துச்சி. அதுக்கு இடையில போனது கொஞ்சம் திரில்லாத்தான் இருந்துச்சி.

டிராபிக்ல போகும் போது, ஸ்டியரிங்க கொஞ்சம் திருப்புறதுக்கும் கவனம் தேவை. எந்த பக்கம் இருந்தும் எது வேண்டுமானாலும் வரலாம்.

வண்டி எங்கயாவது பிரேக் டவுன் ஆச்சுனா, ரோட்டின் இடதோரத்தில் முதல்ல நிறுத்துங்க. உங்களுக்கு கார பத்தி தெரிஞ்சுதுனா, சரி பண்ண முயற்சி பண்ணுங்க. தெரியாம, கார்ல கைய வச்சிங்கன்னா, உங்களுக்கும் பிரச்சினை. காருக்கும் பிரச்சினை. முடிஞ்சவரை சின்ன சின்ன விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க. இல்லாட்டி, கார் கம்பெனியோட சர்வீஸ் சென்டருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லுங்க. எல்லா கார் கம்பெனியும் இருபத்தி நாலு மணி நேர சேவை தராங்க. மாருதி, டாடா, ஹூண்டாய்ன்னா, சர்வீஸ் சென்டர்கள் இந்தியா முழுவதும் அதிகமா இருக்கு. இது தவிர, இன்னும் சில தனியார் சேவை மையங்கள் இருக்கின்றன. ஆண்டு சந்தா கட்டினோமானால், இடத்துக்கே வந்து சரி செய்து விட்டு செல்வார்கள். சிட்டி என்றால் வசதி அதிகம்.

“கார்ல திடீர்ன்னு பிரேக் பிடிக்காம போயிடுச்சின்னா என்ன பண்றது?”

“முதல்ல பயப்படாதீங்க. ஆக்ஸிலேட்டர்ல இருந்து கால எடுங்க. கியரை கொஞ்சம் கொஞ்சமா குறைங்க. ஸ்பிட் குறைஞ்சோன, ஹேண்ட் பிரேக் போட்டு வண்டிய ஓரம் கட்டுங்க”

அப்ப பழைய ரஜினி படங்களில் (துடிக்கும் கரங்கள்ன்னு நினைக்கிறேன்) காட்டுற மாதிரி ரோட்டோரத்தில் இருக்குற கல்லுல மோதி நிறுத்த வேண்டாமா?!!!

”டயர் வெடிச்சுதுன்னா, ஸ்டியரிங்க கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டம். ரொம்ப சிக்கலான நிலைமை அது. வண்டி கன்னாபின்னான்னு போகும். ஸ்டியரிங்க டைட்ட பிடிச்சிக்கிட்டு, வண்டி நிறுத்துற வழியை பாருங்க.”

இதுக்கெல்லாம் பிராக்டிஸ் தர மாட்டாங்களோ?

இன்னைக்கு கார் ஓட்டிட்டு முடிச்சிட்டு போகும்போது அவன், “சார், நாளைக்கு கடைசி நாள்”ன்னான்.

“ம். எப்படிப்பா ஓட்டுறேன்?”

“ம்ம்ம்.... நல்லா ஓட்டுறீங்க சார்”

(தொடரும்)

2 comments:

DHANS said...

டியுப்லஸ் டயரில் வெடிக்கும் பிரச்சனை இருக்காது , இத்தகைய டயர்கள் வெடிக்கும் வாய்ப்பு மிக குறைவு பஞ்சர் ஆனால் மெதுவாக காத்து இறங்கும்.

சரவணகுமரன் said...

தகவலுக்கு நன்றி DHANS