புத்தகம் விமர்சனம் பண்ணுகிற அளவுக்கு தகுதி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. புத்தகம் பற்றிய கருத்தை சொல்கிறேன். அவ்வளவுதான். (ஒ! அதுதான் விமர்சனமா?)
புத்தகத்தை விமர்சனம் பண்ணும் முன்பு, என்னுடைய வாசிப்பு பழக்கத்தை பற்றி சொல்லி விடுகிறேன். பக்கத்து வீட்டில் சிறுவர் மலர் வாங்கி படித்த பழக்கம், பின்பு வாடகை காமிக்ஸ், அம்புலி மாமா என்று வளர்ந்து, அரசு நூலகத்தில் உறுப்பினராக்கி, இன்று கிழக்கு பதிப்பகம் ஓசியாக கொடுத்த "என் பெயர் ஈஸ்கோபர்" புத்தகத்தை ப்லாக்'கில் விமர்சனம் செய்யும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. சாப்பாட்டுக்கு கூட்டோ, பொரியலோ இல்லாட்டியும் பரவாயில்லை, ரெண்டு பக்கம் பேப்பர் (சாப்பிட இல்லை, வாசிக்க) கிடைத்தால் போதும் எனும் அளவுக்கு வாசிப்பு ஆர்வம் உண்டு. ஆரம்பத்தில், கதை, சினிமா புத்தகங்கள் மேல் இருந்த விருப்பம், பின்பு தன்னம்பிக்கை, தனிமனித பொருளாதாரம், வரலாறு என்று சென்று இப்போது அரசியலில் வந்து நிற்கிறது. நாளை எப்படியோ?
பத்ரியும் பா.ராகவனும் அவரவர் பதிவுகளில் இதை பற்றி கூறி இருந்த போது, நான் இந்த புத்தகத்தை தேர்தெடுத்ததற்கு ஒரே காரணம், எழுதியது பா.ராகவன் என்பதுதான். அவர் எனக்கு எழுத்தில் அறிமுகமாகியது "நிலமெல்லாம் ரத்தம்" தொடர் மூலம். அப்போது என் அண்ணனின் நண்பர் அவரை புகழ்ந்து தள்ளினார். அதன் பின்பு, எங்கெல்லாம் அவர் எழுதிய கட்டுரை, தொடர் கண்ணில் பட்டதோ, வாசிக்க தொடங்கினேன். சமீபத்தில், பெங்களூர் புத்தக கண்காட்சியில் கூட இவருடைய டாலர் தேசம் புத்தகத்தை வாங்கலாமா? என்று நினைத்தேன். சைஸை பார்த்து எண்ணத்தை விட்டுவிட்டேன். (படிக்க கஷ்டம் இல்லை. அப்ப, பர்ஸ் ரொம்ப பாவமா இருந்தது :-)) மற்றபடி, புத்தகத்தை திறக்கும் வரை, எஸ்கோபர் யார் என்று தெரியாது.
எஸ்கோபர் ஒரு இன்டர்நேஷனல் கடத்தல் மன்னன். "மை நேம் இஸ் பில்லா" என்கிற மாதிரி "என் பெயர் எஸ்கோபர்" என்று டைட்டில் வைத்திருப்பார்கள் போல. நான் பொதுவா இந்த மாதிரி கடத்தல்காரங்க, கொள்ளைகாரங்க புத்தகங்கள் எல்லாம் வாங்குவது இல்லை. எண்ணங்களே வாழ்வை வழிநடத்தும் என்பதை நம்புபவன் நான் (கிழிஞ்சுது!). சில இடங்களில், வீரப்பன், அம்பானி (! :-)) போன்றோர்கள் புத்தகங்களை வாங்க நினைத்தும் வாங்காதது இதனால்தான். நல்ல மனிதர்களை பற்றி, நல்ல விஷயங்களை பற்றி படிக்க எவ்வளவோ இருக்கிறது. அதை முடித்துவிட்டு இதற்கு வரலாம் என்று விட்டு விடுவேன். (இதுலாம் கொஞ்சம் ஓவர்ன்னு சொல்றது கேக்குது)
சுயக்கதை போதும். மேட்டர்'க்கு வாரேன்.
வீரப்பன் இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன நடந்திருக்கும்? அரசியலுக்கு வந்திருக்கலாம். பிடிக்காத அரசியல்வாதிகளை போட்டு தள்ளியிருக்கலாம். மக்கள் ஆதரவோடு ரவுண்ட் அடிச்சிருக்கலாம். இது எல்லாத்தையுமே எஸ்கோபர் பண்ணியிருக்கிறார். அது மட்டும் இல்லை. அவரின் கடத்தல் "பிசினஸ் மாடல்" எவரையும் ஆச்சர்யப்படுத்தும். அவரின் போதை பொருள் கம்பெனியின் சட்டதிட்டங்கள், ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கு சற்றும் குறைவானதில்லை. கடத்தல் பிளான், அரசியல் செல்வாக்கு, அமெரிக்கா'வுக்கான ஆப்பு, போட்டி கடத்தல் கூட்டம், அரசாங்கத்துடனான யுத்தம், விமான வெடிக்குண்டு, மக்கள் அரண், சரண், கண்டிஷன் கைது, கனவு சிறை என்று அத்தியாயத்துக்கு அத்தியாயம் பரபரப்பு. விறுவிறுப்பு தான். ஒரு கட்டத்தில் இது ஒருவருடைய வாழ்க்கை என்பதை மறந்து கதை போல் படித்து கொண்டிருக்கும் அளவுக்கு நடந்த சம்பவங்கள் எல்லாம் உள்ளது.
இந்த புத்தகம் எஸ்கோபர் என்னும் தனிமனிதனை பற்றியது மட்டும் இல்லை. கொலம்பியா, அதனுடனான அமெரிக்கா தொடர்பு, சர்வதேச போதை கூட்டமைப்பு என்று பலதரப்பட்ட விஷயங்களை விளக்குகிறது. பா. ராகவனின் எழுத்து, சினிமா பார்க்கும் உணர்வை கொடுக்கிறது என்றால் மிகை இல்லை. சாதா சினிமா இல்லை. நக்கல் வசனங்கள் கூடிய ஆக்ஷன் சினிமா. பல இடங்களில் ரசித்து சிரித்தேன். உதாரணத்துக்கு சில,
கடத்தல் பணபரிமாற்றத்தை பற்றி இப்படி சொல்கிறார்,
"சினிமாக்கள் காட்டுவதுபோல் கடற்கரையோரம் சரக்கை எண்ணிப் பார்த்து பெட்டி மாறும் நாடகமெல்லாம் சாத்தியமே இல்லை. கையில் காசு. வாயில் கொகெயின்."
சிறை சூழ்நிலையை இப்படி சொல்கிறார்.
"கொசுக்கடி. தவிரவும் மூத்திர நெடி. கைதிகள் கொஞ்சம்கூட சுகாதாரம் தெரியாதவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். திருடுபவர்கள், கொள்ளையடிப்பவர்கள், கொலை செய்பவர்களானாலும் அடிப்படை சுகாதாரம் பழகவேண்டாமா?"
ஹோட்டல்'லில் பொய் பெயர் கொடுத்து எஸ்கோபரும் அவரது கூட்டாளிகளும் தங்குவதை பற்றி சொல்லும்போது,
"எஸ்கோபர் படு ப்ரில்லியண்டாக ஈக்வடாரில் அதிகம் புழக்கத்திலுள்ள பெயர் ஒன்றையே அளித்திருந்தான். அவனது ஆள்களும் ஆவடி மருதன், தூத்துக்குடி சிவசுப்பிரமணியன், மாயவரம் முத்துக்குமார், சத்தியமங்கலம் நவநீதகிருஷ்ண கண்ணன், அம்பத்தூர் சுஜாதா முத்துராமன் என்று எஃப்.எம். ரேடியோக்களுக்கு நேயர் விருப்பம் கேட்கிறவர்கள் மாதிரியே பெயரளித்திருந்தார்கள்."
இதெல்லாம் தமிழகத்தின் புகழ்பெற்ற பெயர்கள் ஆயிற்றே? :-)
சீரியஸ்யாக சொல்லும் இடங்களிலும் கலக்குகிறார். சொல்றேன் கேளுங்க...
"வீழ்த்துவது ஒன்றுதான் நோக்கம் என்றானபின் மண்ணில் வீழ்த்தினால் என்ன? மேலே அனுப்பினால் என்ன?"
"அது கல்லுக்குள் ஈரமல்ல. புல்லுக்குள் பீரங்கி."
இது போன்ற எழுத்துக்கள், அவரின் வசனத்தில் வெளிவர இருக்கும் "கனகவேல் காக்க"வுக்காக காக்க வைக்கிறது.
கடினமான விஷயங்களையும் எளிமையாக விளக்கிறார். போதை நெட்வொர்க்'யை டோராவின் பயணங்களுடன் ஒப்பிட்டு விவரிக்கிறார். அதுவே, சில இடங்களில், பேமானி, புரோட்டா, சனீஸ்வரன் போன்ற வார்த்தைகள், ஹாலிவுட் டப்பிங் படம் பார்த்த எபெக்டை கொடுக்கிறது.
அகத்தி கீரை, பொன்னாங்கன்னி கீரை வகைகளை சொல்லுவது போல் போதை செடி வகைகளை சொல்லிவிட்டு போவதாகட்டும், சமையல் குறிப்பு போல் போதை பொருள் தயாரிக்கப்படுவதை சொல்லுவதாகட்டும் எழுத்தில் எளிமை. சுவாரஸ்யம். வரலாற்று உண்மை சம்பவங்களை இவ்வளவு சுவாரஸ்யமான எழுதுவதில் இவர் கிங். வரிக்கு வரி கலகலப்பூட்டுகிறார். வரலாறு பாடப்புத்தகத்தை உருவாக்க இவரை விட்டால், அப்புறம் தமிழ்நாட்டில் வரலாறு பாடம் பிடிக்கலை என்று எந்த பிள்ளையும் சொல்லாது.
கலக்கலான இந்த புத்தகத்தில் உள்ள ஒரு சின்ன குறைபாடு, சிறு சிறு எழுத்து பிழைகள். ஒரு பக்கத்தில் 'ள'க்கள், 'மி'க்களாக அச்சிடப்பட்டது, ஒரு கணம் என்னை ஏதோ ஹை டெக் தமிழ் என்று எண்ணவைத்து விட்டது.
படித்து முடித்த பின் ஒரு நிமிடம் யோசித்தேன். விடாமல் படிக்க வைக்கும் இந்த புத்தகத்திற்கு பின் உள்ள எழுத்தாளரின் உழைப்பு அசாதாரணமானது. குடுங்க சார், கைய? கை வலிக்கும் அளவுக்கு குலுக்கலாம்.
இந்த புத்தகம் படிப்பதால் என்ன பயன்? நல்ல வாசிப்பனுபவம். இவ்ளோ நடந்திருக்கு. இது தெரியாமலா இருந்தோம் என்று நினைக்க தூண்டும் சம்பவங்கள். அதிகபட்ச பலனாக, எஸ்கோபரை முன்னுதாரணமாக கொண்டு போதை தொழிலில் இறங்கலாம். ஆட்டம் ஆடி அடங்கலாம். சாத்தியமில்லை. ஒன்றும் வேண்டாம். சரித்திரத்தை சுவையாக சொல்லும் பா. ராகவனின் மற்றுமொரு புத்தகம். படிப்பவர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்.
ஓசியில் கொடுத்தால் பினாயிலையும் குடித்து விட்டு, ஆட்சியையும் கொடுக்கும் தமிழர்களில் ஒருவன் என்பதால் என்னவோ, எனக்கு இந்த புத்தகம் ரொம்பவே மகிழ்ச்சியை கொடுத்தது :-).
புத்தகம் வாங்க இங்கே செல்லவும்...
4 comments:
//குடுங்க சார், கைய? கை வலிக்கும் அளவுக்கு குலுக்கலாம்.//
ராகவன் அவர்களோட எழுத்தை பாராட்டும்போதே உங்க எழுத்தாள்மை ரசிக்க வைக்குதுங்க, வாழ்த்துக்கள்!
//சில இடங்களில், வீரப்பன், அம்பானி (! :-)) போன்றோர்கள் புத்தகங்களை வாங்க நினைத்தும் வாங்காதது இதனால்தான்.//
தமாக்ஷா சொல்லிருந்தீங்கன்னா சரிதான். இல்லாட்டி அம்பானியையெல்லாம் இப்படி அவமதிக்கறதை கன்னாபின்னானு கண்டிக்கறங்க...
நன்றி பாசகி
//தமாக்ஷா சொல்லிருந்தீங்கன்னா சரிதான். இல்லாட்டி அம்பானியையெல்லாம் இப்படி அவமதிக்கறதை கன்னாபின்னானு கண்டிக்கறங்க...//
தமாஷாத்தான் சொல்றேன்... இருந்தாலும் அவரு பண்ணுன கோல்மால எல்லாம் தொழில் நுணுக்கம் என்று எடுத்து கொள்ள முடியவில்லை.
ராகவனின் எழுத்து எப்போதுமே மேலும் மேலும் நம்மை வாசிக்கவும் யோசிக்கவும் வைப்பதே.உங்கள் விமர்சனமும் ரசிக்கும்படி இருந்தது.
அன்புடன்
நாகூர் ரூமி
நன்றி நாகூர் ரூமி
Post a Comment