விவேகானந்தரையும், பெரியாரையும் இணைத்து ஒப்பிட்டு ஒரே பதிவில் எழுத வேண்டியதற்கான காரணம், நான் இருவரை பற்றியும் ஒரே நாளில் ஒரு பயணத்தின் போது படித்தது மட்டுமே.
வசதியான வீட்டில் பிறந்தவர்கள் இருவரும். 1863 இல் கல்கத்தாவில் நரேந்திரனாக பிறந்தவர், விவேகானந்தர். அதேபோல், 1879 இல் ஈரோட்டில் பிறந்தவர், பிற்காலத்தில் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஈ.வெ. ராமசாமி. அவரவர் குடும்பங்களில் இருந்து சமுதாயத்துக்காக சேவை செய்ய முதன்முறையாக வந்தவர்கள் இருவரும்தான்.
இருவருமே சிறுவயதில் கடவுளை பற்றிய கேள்விகளை கேட்டுள்ளார்கள். பெரியார், காசியில் துறவியாக திரிந்து, பின்பு கடவுள் பற்றிய தன் புரிதலை பிடிவாதமாக பின்பற்றி, கடவுளை மறுத்து, போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். விவேகானந்தரும் சிறு வயதில் கடவுள் பற்றிய கேள்விகளை கேட்டு, மூட நம்பிக்கைகளை எதிர்த்து வந்த பிரம்ம சமாஜத்தில் ஆர்வம் காட்டி, பின்னர் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் அன்பின் காரணமாக ஆன்மிக வழியில் தீவிரமாக ஈடுப்பட்டார்.
எந்நிலையிலும் தங்கள் கொள்கையை விட்டு கொடுக்காமல் வாழ்ந்தவர்கள் இவர்கள். நாடு பஞ்சத்தால் வாடி கொண்டிருந்த போது, சிலர் பசுக்களை காக்க நன்கொடை கேட்டு விவேகானந்தரிடம் வந்தார்கள். அவர்களிடம், பட்டினியில் வாடும் மக்களை பற்றி விவேகானந்தர் கேட்க, அதற்கு அவர்கள், அது கர்ம பலன் என்றும் அது தங்கள் கடமை இல்லை என்றும் கூறியதை கேட்டு கோபத்தில் "சக மனிதர்களை பற்றி கவலைப்படாமல் நன்கொடை வசூலிக்கும் உங்களுக்கு பசுக்களை பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது?" என்று திருப்பியனுப்பினார்.
ஒருமுறை, பெரியாரின் கடவுள் மறுப்பு பேச்சால் கோபமடைந்த சிலர், மறைந்திருந்து அவர் மேல் ஒரு செருப்பை எறிந்தனர். செருப்பை எடுத்த பெரியார், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுளை நம்புபவன் முட்டாள்" என்று கூற, மேலும் கோபமடைந்த அவர்கள் மற்றொரு செருப்பையும் எறிந்தனர். "நல்ல ஜோடி செருப்பு" என்று அதையும் எடுத்து கொண்டு சென்றார் பெரியார்.
வெளிநாடுகளில் இந்தியா, இந்தியர்கள் பற்றி உயர்வாக எண்ண செய்தவர்கள் இவர்கள். நம் நாடு பற்றிய அவர்களின் நினைப்பை மாற்றியமைத்து, நமது நாட்டின் பெருமையை உயர செய்தார்கள். விவேகானந்தர் அவரின் புகழ் பெற்ற சிகாகோ மாநாட்டு சொற்பொழிவில் இந்தியா பற்றியும் இந்து மதம் பற்றியும் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் கேட்போரை சிந்திக்க வைத்தது. பெரியார் இங்கிலாந்தில் ஆளும் தொழிற்கட்சியின் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சித்து பேசிய பேச்சும், அதற்கான துணிச்சலும், அம்மக்களை ஆச்சர்யப்பட வைத்தது. அதுபோலவே, அவரின் ரஷ்ய பயணமும்.
இருவரும் மற்றவர்களிடம் சிறப்பாக வாதம் செய்யும் திறமையை பெற்றிருந்தனர். ஒருமுறை ஒரு மன்னர் விவேகானந்தரிடம் உருவ வழிபாடு பற்றி மோசமாக விமர்சனம் செய்ய, மன்னரின் திவானிடம் சுவரில் மாட்டப்பட்டிருந்த மன்னரின் ஓவியத்தை எடுத்து வந்து அதன் மீது துப்ப சொன்னார். அதற்கு அவர் தயங்க, "எப்படி அது ஓவியம் என்றாலும் மன்னரை நினைவு படுத்துகிறதோ, அதுபோல் கற்களை மக்கள் கடவுளாக பார்த்து வழிப்படுகிறார்கள்" என்றார். பெரியாரிடன், ஒரு கூட்டத்தில் கடவுள் மேல் நம்பிக்கை உள்ள ஒருவர், "கடவுள் உங்கள் முன்னால் தோன்றினால் என்ன சொல்லுவீங்க?" என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில், "கடவுள் இருக்கார்ன்னு சொல்லிடுவேன்"ன்னார்.
வயதின் காரணமாகவும் உடல் உபாதைகளின் காரணமாகவும் பெரியார் 95 வயதில் இறந்தார். தொடர் பயணங்களினாலும் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்த விவேகானந்தர் தனது 38 ஆம் வயதில் இறந்தார்.
தமிழகத்தில் பெரியார் முக்கியமாக எதிர்த்தது சாதியை. இன்று அவர் வழியில் பகுத்தறிவு பேசுபவர்கள் ஊக்குவிப்பது, சாதி அரசியலைத்தான். அதேப்போல், விவேகானந்தர் வலியுறுத்தியது இந்து மதத்தின் அமைதியையும், சகிப்புத்தன்மையையும். ஆனால், இன்று இந்து மதத்தின் சாதுக்கள் தலையை வெட்டி கொண்டு வர சொல்கிறார்கள்.
ஏழைகளுக்கு செய்யும் உதவிகள் மூலம் கடவுளுக்கு சேவை செய்யலாம் என்ற கருத்தை முன்வைத்தவர் விவேகானந்தர். கடவுள் பக்தியை விட மனிதாபிமானம் தான் முக்கியம் என்ற சொல்படி வாழ்ந்தவர் பெரியார்.
விவேகானந்தரின் எண்ணங்கள், பகுத்தறிவுவாதிகளின் பார்வையோடு ஒத்து போவது. ஆழமாக பார்த்தால், விவேகானந்தர் - பெரியார் இருவரின் கொள்கைகளுமே ஒரே திசையை நோக்கியதுதான் என்று நான் சொல்லவில்லை, சொல்லியது கலைஞர் கருணாநிதி.
6 comments:
வித்தியாசமான பதிவு
நன்றி முரளிகண்ணன்
நல்ல ஒப்பீடு ! இருபக்கமுமான எதிர்தரப்புகள் புரிந்து கொள்ளாது !
:)
விவேகானந்தரும், மகாத்மா காந்தியும் இந்து மத்த்தினை அதன் மூட நம்பிக்கைகளிலிருந்து மாற்றி மனித நேயத்துடன் மக்களுக்குப் பயன் பட இறைவனைப் பயன் படுத்த விரும்பினார்கள்.
பெரியாரோ அது ஒரு போதும் நட்க்காது,நடக்க விட மாட்டார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொண்டார்.
கடவுள், மதம் படைக்கப் பட்டதே அறியாமை,அச்சம் இவற்றால் சிலர் பலரின் மூளைகளை விலங்கிட்டு ஆட்டிப் படைக்கத்தான் என்ற முடிவிற்கு மிக்கத் துணிவுடன் வந்து பாடு பட்டார்.
உலகமே எதிர் காலத்தில்
"கடவுளை மற, மனிதனை நினை" என்று தான் செல்லப் போகிறது.
நன்றி கோவி. கண்ணன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி thamizhan
Post a Comment