Sunday, June 22, 2008

சிறுகதை - என்ன பாப்பா வேணும் உனக்கு?

ஹாலில் இருந்த தொலைப்பேசி சத்தம் கேட்டு சமையலறையில் தேய்த்து கொண்டு இருந்த பாத்திரத்தைப் அப்படியே போட்டுவிட்டு வந்து போனை எடுத்தாள் கமலா.

“ஹலோ! நான் செந்தில் ஃபிரண்ட் ராஜேஷ் பேசுறேன்.”

“சொல்லுங்க”

“அவன் இருக்கானா?”

“அவரு இன்னும் ஆபிஸ்ல இருந்து வரலங்க”

“பவளம் இதழில் வந்த அவனொட முற்போக்கு கருத்துகள் நிறைந்த கட்டுரைக்காக அவன் ஆபிஸ்ல அவன பாராட்டி இருக்காங்க. அதான் வாழ்த்தலாம்னு கால் பண்ணினேன். அவன் வந்தா சொல்லிருங்க.”

“அப்படியா?” என்று மிதமாக விசாரித்தாள்.

“அப்புறம் நீங்க எப்படி இருக்கீங்க? உடம்ப பார்த்துக்கோங்க”

தான் கர்ப்பமான விஷயத்தை அவர் சொல்லியிருப்பார் போலும் என்று எண்ணிக்கொண்டு “சரிங்க” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவள், சமையலறையில் வேலையைத் தொடர்ந்தாள்.

சன் டிவியில் தேவயானி சென்று ராதிகா வரும் நேரத்தில் செந்தில் வந்தான். வீட்டில் நுழையும் போது அவனுடைய இரு சக்கர வண்டி அவன் பராமரிப்பை சொல்லும்விதமாக எழுப்பிய சத்தத்தில் அவர்களது முதல் குழந்தை ஐந்து வயது கீர்த்தி தூக்கத்திலிருந்து எழுந்தாள்.

ரவு உணவு முடிந்து செந்தில் படுக்கையறையில் கீர்த்தியுடன் விளையாடிக் கொண்டியிருந்தான். கணவன் இன்னமும் தன்னிடம் அலுவலக நிகழ்வை சொல்லாததை நினைத்துக் கொண்டு, கமலா காலை உணவிற்காக காய்களை வெட்டிக் கொண்டு இருந்தாள்.

“அப்பா, அம்மா fat மம்மி…”

“ஏம்மா?”

“அம்மா வயிரு பெருசாயிடுச்சு இல்ல… அதான்…”

“அம்மா வயித்துல பாப்பா இருக்கு” குழந்தைக்கும் விவரம் தெரிய வேண்டுமென்று கூறினான்.

கீர்த்தி கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“பாப்பாவா?”

“ம்ம்ம்… உனக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சி பாப்பா வேணுமா?”

சமையலறையில் வேலையை முடித்த கமலா கேட்டுக் கொண்டு இருந்தாள்.

குழந்தை யோசித்து “தங்கச்சி பாப்பா” என்றது.

“ஏன்? நீ இருக்குற இல்ல… தம்பி பாப்பா வேண்டாமா?” என்றான் அவசரமாக.

கமலா அறையில் நுழைந்தாள்.

விழித்த குழந்தையிடம் “எந்த பாப்பாவா இருந்தா என்ன? எல்லாம் ஒண்ணுதான்” என்றான் செந்தில்.

கமலா மனதிற்குள் சிரித்தாள்.

7 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

:)

சரவணகுமரன் said...

நன்றி விக்னேஷ்வரன்.

சரவணகுமரன் said...

கதை பற்றிய உங்கள் கருத்துகள் எனக்கு ஊக்கமளிக்கும்.

மங்களூர் சிவா said...

/
“ஏன்? நீ இருக்குற இல்ல… தம்பி பாப்பா வேண்டாமா?” என்றான் அவசரமாக.

கமலா அறையில் நுழைந்தாள்.

விழித்த குழந்தையிடம் “எந்த பாப்பாவா இருந்தா என்ன? எல்லாம் ஒண்ணுதான்” என்றான் செந்தில்.

கமலா மனதிற்குள் சிரித்தாள்.
/

அண்ணா குழப்பறீங்களே!

முதலில் கீர்த்தியிடம் தம்பி பாப்பா வேண்டாமா என கேட்டவன் மனைவி அறையில் நுழைந்ததும் இப்படி கூற என்ன காரணம்!?!?

சரவணகுமரன் said...

என்னங்க மங்களூர் சிவா, புரியலையா?

கிஷோர் said...

superu pa

சரவணகுமரன் said...

நன்றி கிஷோர்