போன வாரம் மதுரைக்கு ஒரு கல்யாணத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால் ஓசுரிலிருந்து மதுரைக்கு சேலம் வழியாக பேருந்து மாறி மாறி சென்றேன். ராத்திரி எந்நேரமும் எந்த ஊரிலிருந்தும் எந்த ஊருக்கும் செல்லலாம் என்ற பெருமை நமது போக்குவரத்துக்கழகத்திற்கு இருந்தாலும், அளவு கடந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தால் (!) நமது பேருந்துகளில் சராசரியாக மூன்று திரைப்படங்கள் பார்க்க வேண்டிய தொல்லை (சிலருக்கு வசதி) உள்ளது.
நான் சென்ற பேருந்துகளில் போடப்பட்ட படங்கள், அறை எண் 305 இல் கடவுள், நேபாளி, அரசாங்கம். நான் சென்ற இரண்டு பேருந்துகளுமே அரசு பேருந்துகள். தமிழ்நாட்டில் திருட்டு சிடி விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று அனைவருமே அறிந்தாலும் எந்தவிதமான பயமும் இல்லாமல் கவலையும் இல்லாமல் பேருந்தில் பயணம் செய்த மக்களும், சட்டத்தை இயற்றிய அரசின் ஊழியர்களும் படத்தை பார்த்து கொண்டு வந்தார்கள்.
இதில் கடவுள் படத்தில் திருட்டு விசிடி பார்ப்பவர்களுக்கு எதிராக காமெடி பிரச்சாரம் வேறு. அந்த சீனை திருட்டு விசிடில பார்க்கும் போதும் யாருக்கும் குற்ற உணர்ச்சி இல்லை. ஏன்?
அடிப்படையில் இது ஒரு குற்றமா என்பதே ஒரு குழப்பம். திரைப்படத்துறையினர், தங்களுக்கு சேரவேண்டிய பணம் வராததால் இதை குற்றம் என்கிறார்கள். மக்கள் இதை குற்றமாக கருதாததற்கு, திரை அரங்குகளில் அதிக கட்டணம் என்று சிலர் வாதம் செய்கிறார்கள். இப்பொழுது கிடைக்கும் சிடிக்களில் திரையரங்குகளில் எடுக்கப்பட்டது மட்டுமில்லாமல், ஒரிஜினல் சிடிக்களில் இருந்து காப்பி செய்யப்பட்டதும் உள்ளது. ஆக, ஒரிஜினல் சிடி பார்ப்பது தவறு இல்லை. அதில் இருந்து காப்பி செய்யப்பட்ட சிடி பார்ப்பது தவறு. ஆனால் இந்த சட்ட திட்டம் ஆடியோ காசெட்டுகளுக்கு இல்லையா? முன்பு, பல படங்களின் பாடல்களை நமக்கு காசெட்டில் பதிவு செய்து தரும் தொழிலை பலர் செய்து வந்து உள்ளார்கள். இன்று, சிடிகளின் வருகையால், இவ்வகையான தொழில் குறைந்து இருந்தாலும், இன்றும், இருப்பதாகவே நினைக்கிறேன். அதே சமயம், திருட்டு ஆடியோ சிடிகளும், தாராளமாக கிடைக்கிறது. இதற்க்கு திருட்டு திரைப்பட சிடி அளவுக்கு எதிர்ப்பில்லை.
ஆனாலும் இந்த தகவல் தொழில்நுட்ப காலத்தில் காப்பிரைட், உரிமம் போன்றவற்றிற்கு மதிப்பு கொடுப்பது அவசியம். உரிமம் பெறாத படங்களை பார்ப்பது தவறு என்று நமது சட்டம் சொல்லியிருப்பதால், இவ்வாறு படங்களை பார்க்க நேரும்போது, மக்களுக்கு தன்னிச்சையாக குற்ற உணர்வு ஏற்பட வேண்டும். ஆனால், யாருக்கும் இவ்வாறு தோன்றுவதாக தெரியவில்லை. இதற்கு, நாம் சார்ந்த சூழலே காரணம் என்று நினைக்கிறேன்.
சந்திரமுகி வெற்றி விழாவின் போது, கலைஞர் "நான் எந்த விழாவிற்கு சென்றாலும், அதை பற்றி அறிந்து கொண்டே செல்வேன். இப்போது சந்திரமுகி படத்தை பார்த்து விட்டே வந்துள்ளேன். எப்படி பார்த்தேன் என்று கேட்க கூடாது" என்று நகைச்சுவையாக கூறினார். தலைவர் ஏன் அப்படி சொன்னார்? எப்படி பார்த்தார்? என்றெல்லாம் தெரிய வில்லை. அவர் திரையரங்கு சென்று பார்த்திருந்தால் செய்தி தாளில் வந்திருக்கும். ஒரிஜினல் சிடிக்கு வெளிநாட்டில் தான் அனுமதி. தமிழ்நாட்டில் இல்லை. எப்படியோ?
அதேபோல், போன வருடம் தீபாவளிக்கு, சன் டிவியில் கில்லி படம் ஒளிபரப்புவதாக இருந்தார்கள். கலைஞர் டிவியில் அரசு விருது வழங்கும் விழா ஒளிபரப்புவதாக இருந்தார்கள். கடைசி நேரத்தில் சன் டிவியில் அரசு விழாவை ஒளிபரப்பியதால், கலைஞர் டிவியில் தாங்கள் உரிமம் பெறாத கில்லி படத்தை சிறிது நேரம் (சன் டிவி அரசு விழாவை நிறுத்தும் வரை) ஒளிபரப்பினார்கள். இதுவும் திருட்டு விசிடியில் படம் பார்ப்பது போன்றது தான்.
இது போல், அரசு திருட்டு விசிடிக்கு எதிராக நிலையாக இல்லாமல் இருப்பதே மக்களின் இந்த மனநிலைக்கு காரணம் என்று கருதுகிறேன். எப்பொழுது தேவையோ அப்பொழுது மட்டும் நடவடிக்கை எடுப்பதாக தோன்றுகிறது. உதாரணத்திற்கு, சந்திரமுகி வெளியானபோது அதன் சிடிக்கு எதிராக நடவடிக்கைகள் வேகமாகவும், கடுமையாகவும் இருந்தது. இப்போது, உதயநிதி ஸ்டாலினின் குருவி படத்தின் சிடிக்கு எதிராகவும் போலீசாரின் நடவடிக்கைகள் அதிகமாக இருப்பதாக செய்திகள் வருகின்றது. அதே நேரம், விஜயகாந்தின் அரசாங்கம் படத்தின் சிடி? நாளையே, கமல் கலைஞரை சந்திப்பார். தசாவதாரம் சிடிக்கு பயங்கர கெடுபிடியாக இருக்கும். இதுபோன்ற, நிலையான, பொதுவான நடவடிக்கைகள் இல்லாததும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.
இதற்கு தீர்வு, சிடிக்களை ஒழுங்கான முறையில் தயாரிப்பாளரின் அனுமதியுடன், உரிமம் வழங்கி படம் வெளியான சில நாட்களில் உள்ளூரில் அனுமதிப்பது என்பது என்னுடைய கருத்து. இதன் மூலம் திரையரங்குகள் சிறிது பாதிப்பு அடைந்தாலும், திரையரங்கு சென்று பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் குறையாது. இந்த பாதிப்பை திருட்டு விசிடிக்களால் திரையரங்குகள் முன்னமே அடைந்து விட்டார்கள். திரையரங்கு சென்று படம் பார்க்கும் அனுபவம் வேறு. அதை எந்த தொழில்நுட்பத்தினாலும் வீட்டினுள் கொண்டு வர இயலாது.
முன்பு கேபிள் வந்த போது அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. சாட்டிலைட் சானல் வந்தபோது எதிர்ப்பு கிளம்பியது. இப்பொழுது, டிடிஹைச் டிவிக்கும் எதிர்ப்பு. மக்களுக்கு வசதி தரும் எந்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் எதிர்ப்பு அதிக நாள் இருக்காது. தமிழ்நாட்டில் விசிடி என்று முறைப்படுத்த படுமோ? "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேசனில் விசிடி வழங்குவோம்"ன்னு ஏதோவொரு கட்சி வாக்குறுதி தரும் நாள் கூட வரலாம்.