போன வாரம் கன்னியாகுமரி போயிருந்தேன். விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை எல்லாம் பார்த்தேன். அங்கு பணிபுரியும் ஒரு ஊழியர் (அங்கு பணிபுரிபவர்கள் எல்லாம் அரசு ஊழியர்கள்தானே???) திருவள்ளுவர், திருக்குறள் சம்பந்தமான புத்தகங்களை விற்றுகொண்டிருந்தார். சரி, நம்ம தெய்வ புலவரை பத்தி தெரிஞ்சிகலாமுன்னு ஒரு சின்ன புத்தகத்தை வாங்கினேன். அதுல போட்டுயிருந்த கதை (!) இதுதான்.
திருவள்ளுவர் வழங்கிய திருக்குறள் தமிழர்களால் தமிழ் வேதம் என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக (300 AD - 600 AD) வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.
அவர் சென்னை மயிலாபூரில் பிறந்தார். வள்ளுவர் என்பது அவரின் முன்னோர்களின் சாதி பெயராகும். அவரின் உண்மையான பெயர் தெரியாதலால், அவர் இப்பெயரிலே அழைக்கப்பட்டார்.
அவரின் அப்பா ஒரு பிராமணர். பெயர் பகவான். அவரின் அம்மா ஆதி, ஒரு கீழ் சாதி பெண்மணி. வள்ளுவர் பிறந்தவுடன் பெற்றோர்களை பிரிந்து வள்ளுவ சாதியை சார்ந்த மர்கசகாயன் என்பவரால் வளர்க்கப்பட்டார். அவருடைய மகள் வாசுகி வள்ளுவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். வாசுகியே, தனது அன்பு, பதிபக்தியால் வள்ளுவருக்கு அடையாளம் கிடைக்க காரணமாயிருந்தார். வள்ளுவர் திருமணத்திற்கு முன்பு வாசுகியை சோதிக்க விரும்பினார். வாசுகிக்கு சிறிது மண்ணை கொடுத்து சமைக்க சொன்னார். வாசுகி சமைத்த உடன் அந்த மண் சாதமானது. இதனால் வள்ளுவர் மகிழ்ச்சியடைந்து வாசுகியை திருமணம் செய்தார். அவர்களது மணவாழ்வு மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணம். வாசுகி, வள்ளுவரின் உத்தரவுக்கும் தேவைகளுக்கும் எந்தவிதமான கேள்விகளும் கேட்காமல் முணுமுணுப்பு இல்லாமல் சேவையாற்றினார். அப்படிப்பட்ட பெண் இறந்தபொழுது வள்ளுவர் இவ்வாறு இரங்கல் பாடலை இயற்றினார்.
"ஒ! எனதருமை அன்பே! அருமையாக சமைத்து, கணவனின் கட்டளைகளுக்கு எவ்வித மறுப்பின்றி கீழ்படிந்து, எப்பொழுதும் கணவன் உறங்கிய பின்பே உறங்கி, எழும் முன்பே எழுவாயே, நீயில்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்?"
அவ்வையாரே, வள்ளுவரை தமிழ் சங்கத்தை சேர்ந்த புலவர்களுடன் அறிமுகப்படுத்தி வைத்தார். முதலில், அவர்கள் வள்ளுவரை தங்களுடன் சேர்த்து கொள்ள தயங்கினர். அக்காலத்தில் சங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றியே பாடல்களை, செய்யுள்களை அங்கீகரித்துவந்தனர். அதனால் திருக்குறளை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. திருக்குறளை சோதிக்க விரும்பினார்கள். அதனால் அவர்கள் வள்ளுவரை சங்க பலகையில் அமர சொன்னார்கள். சங்க பலகை என்பது மரத்திலானது. இலக்கியங்களை, புலவர்களை சோதித்து, அங்கீகரிக்க உதவுவது. வள்ளுவர் அமைதியாக திருக்குறளை அப்பலகையில் மற்ற புலவர்களுடன் வைத்தார். அப்பொழுது சங்க பலகை, அமர்ந்திருந்த புலவர்களை அருகிலிருந்த ஏரியில் தூக்கி எறிந்தது. திருக்குறள் எவ்வித பாதிப்பில்லாமல் இருந்தது. அதன் பின்பு திருக்குறள் அனைவராலும் அங்கீகரிக்க பட்டு புகழ் அடைந்தது.
கதை எப்படி?
இந்த கதை திருவள்ளுவர் புகழ் பாடி, வள்ளுவர் கோட்டம் அமைத்து, குமரி முனையில் வானுயர சிலை அமைக்க பாடுபட்ட நம்ம பகுத்தறிவு முதல்வருக்கு தெரியுமா? ஏதும் விளக்கம் சொல்லியிருக்காரா?
திருவள்ளுவரை பற்றிய வரலாறு தெரியவில்லை என்றால் விட்டுடலாமே? ஏன் இந்த ஸ்க்ரின் ப்ளே?
சரி, சொன்ன விஷயம் ஒழுக்கத்தை கற்று தருது... அதனாலே பகுத்தறிவு பார்க்க வேண்டாம் என்றால், ராமாயணத்துல மட்டும் ஏன் பகுத்தறிவு புகுந்து விளையாடுது?