Friday, January 25, 2008

நம்ம அரசியல்வாதிகளும் அதிரடி கேள்விகளும்...


இது அரசியல்வாதிகளிடம் கேட்கவேண்டிய கேள்விகளை பற்றிய பதிவு இல்லை. ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளை பற்றிய பதிவு. கேட்டது கரன் தாபர். இவரை பற்றி ஆங்கில செய்தி சானல்களை பார்பவர்களுக்கு தெரிந்திருக்கும். இவர் BBC, CNN IBN போன்ற சேனல்களுகாக பிரபலங்களுடன் எடுத்த பேட்டிகள் பிரபலம்.




குறிப்பா தமிழக அரசியல்வாதிகளிடம் நம்ம நிருபர்கள் அதிரடியா எந்த கேள்விகளும் கேட்பதில்லை. இதுக்கு ஒரு காரணம் பயம். அவங்கள பத்தி தப்பா எதாச்சும் எழுதினாவே பத்திரிக்கையை எரிப்பது, பத்திரிக்கை அலுவலங்களை உடைப்பது என்று அவர்கள் சார்ந்த கட்சியினர் ஈடுபடுவார்கள். இன்னொன்னு, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சானல், ஒரு பத்திரிக்கைன்னு இருக்கு. எதாச்சும் சொல்லனும்னா அது மூலமாவே சொல்லிட்டு மற்ற பத்திரிக்கைகளை தவிர்த்து விடுவார்கள். கருணாநிதி அறிக்கையை கேள்வி-பதில் பாணியில் வெளியிட்டு வருகிறார். சாதாரணமாக படிப்பவர்களுக்கு "தலைவர் எல்லா கேள்விகளுக்கும் நல்லா பதில் சொல்லி இருக்காரே" ன்னு தோணும்.






ஒரு காலத்தில் சன் டிவியில் ரபி பெர்னாட் நல்லா கேள்வி கேட்டுட்டு இருந்தார். இப்ப அவரு ஜெய டிவில பரிதாபமா அவருக்கே பதில் தெரிஞ்ச கேள்விகள கேட்டுட்டு இருக்கார். வேற யாரு நினைவுக்கு வாரங்கன்னு பார்த்த, விஜய் டிவி கோபி இருக்காரு. இவரு ஓரளவுக்கு நல்ல கேள்வி கேட்பாரு. ஆனா அதுவும் safe ஆ தான் இருக்கும்.






இந்த மாதிரி காரணங்களால் நம்ம அரசியல் வாதிகளை கரன் பேட்டி எடுக்கும் போது எனக்கு விஷேசமா தெரியும். அதனாலே கொஞ்சம் உக்கார்ந்து பார்ப்பேன். அதில் குறிப்பிடத்தக்கவை ஜெயலலிதா, ப. சிதம்பரம், வைகோ, சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் போன்றோரின் பேட்டிகள். அந்த பேட்டிகளின் சில பகுதிகளை மொழி பெயர்த்து இங்கே கொடுத்துள்ளேன்.






ஜெயலலிதா பேட்டி.
கரன் : உங்களுக்கு நேரமில்லைன்னு சொல்றிங்க... ஆனா உங்களுக்கு முன்னாடி முதல்வரா இருந்தவர் மேல ஒரு நாள் முன்னாடியே கேஸ் பதிவு பண்ணி இருந்தாலும், நீங்க அரஸ்ட் பண்ணுனது சனி கிழமை அதிகாலை 2 மணி.



ஜெயலலிதா : நீங்க என்ன கொஞ்சம் பேச விட்டிங்கன்னா...



கரன்: ஆனா நான் என் கேள்விய முடிச்சிக்கிறேன்...



ஜெயலலிதா : நீங்க எங்க வரிங்கன்னு எனக்கு தெரியுது. திமுக அரசு என் மேல் பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தார்கள். பின்பு நிரபராதியான தீர்ப்பு கூறப்பட்ட அந்த வழக்குக்காக 28 நாட்கள் சிறையில் துயரடைந்து இருந்தேன்.


கரன் : அப்ப அந்த கைது பழி வாங்கும் நடவடிக்கையா?

ஜெயலலிதா : என்னை கருணாநிதி கைது செய்த போது மீடியா தர்மம் சூது மீது கொண்ட வெற்றியாக செய்தி வெளியிட்டு பாராட்டினார்கள். பின்பு மக்கள் கருணாநிதியின் சூழ்ச்சியை அறிந்து 2001 தேர்தலில் எனக்கு மாபெரும் வெற்றியை அளித்தார்கள்.


.............

கரன் : நீங்க ஒரு 77 வயதானவரை கைது செஞ்சிருக்கிங்க...


ஜெயலலிதா : ஊழலை பார்க்கும்போது வயதுக்கு இடமில்லை...


கரன் : 14 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரு முன்னாள் முதல்வர்...


ஜெயலலிதா : என்னை கைது செய்யும் போது நானும் ஒரு முன்னாள் முதல்வர் தான்.


கரன் : அப்ப இது பழிக்கு பழியா?


ஜெயலலிதா : இது பழிக்கு பழி அல்ல. ஊழல் வழக்குகாக எடுக்கபட்ட நடவடிக்கை.


.............

கரன் : எதற்காக உங்கள் MLA க்களும் அமைச்சர்களும் பொது கூட்டங்களில் உங்கள் காலில் விழுகிறார்கள்?


ஜெயலலிதா : பிற அரசியல் தலைவர்கள் காலிலும் தான் விழுகிறார்கள். கருணாநிதியின் காலிலும் தான் விழுகிறார்கள்.


கரன் : ஆனா அவர்கள்...


ஜெயலலிதா : ஆனால் நீங்கள் அதை பார்க்க மாட்டீர்கள். அதுவே நான் எதாவது ஒரு சிறு விஷயங்களில் சம்பந்த பட்டு இருந்தாலும் அதை ஊத்தி பெரிதாக்குவார்கள். பெரியவர்களின் காலில் விழுந்து வாழ்த்து பெறுவது இந்திய கலாச்சாரம்.


கரன் : இது அந்த வகையிலானதா?


ஜெயலலிதா : ஆமாம். இது இந்திய கலாச்சாரம்தான். நீங்கள் இந்தியர் என்று தான் நான் நினைக்கிறேன். இந்திய கலாச்சாரத்தை பற்றி போதிய அளவு நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று கருதுகிறேன்.


கரன் : இருந்தாலும் அமைச்சர்களுக்கு இது உகந்ததா?


ஜெயலலிதா : நான் அவர்களை இது போல் செய்ய வேண்டாம் என்று கேட்டுளேன்.


கரன் : அவர்கள் நீங்கள் சொல்வதை கேட்பதில்லையா?


ஜெயலலிதா : அவர்கள் கேட்பார்கள். தற்போது இதுபோல் பொது இடங்களில் செய்வதில்லை.


................

முடிவில்...
கரன் : உங்களிடம் பேசியதில் மிக்க மகிழ்ச்சி.


ஜெயலலிதா : உங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி இல்லை என்று தான் நான் சொல்ல வேண்டும்.


------------------------------------------------------------------------------

வைகோ பேட்டி.


கரன் : உங்களுடைய கூட்டணி தலைவரான ஜெயலலிதா "அதிமுக, விடுதலை புலிகள் போன்ற தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவு அளிக்காது" என்று கூறியுள்ளார். அவருடன் எப்படி உங்கள் கூட்டணி?

வைகோ : ஒவ்வொரு அரசியல் கட்சியிடமும் பிரச்சனைக்களுக்கு ஒவ்வொரு விதமான தீர்வுகள் இருக்கும். இல்லாவிட்டால், வேறு வேறு அரசியல் கட்சிகளுக்கு தேவை இல்லையே.

கரன் : யார் உங்களுக்கு மிகவும் முக்கியம்? விடுதலை புலியா? ஜெயலலிதாவா?


வைகோ : அதிமுகவுக்கு அதற்கென ஒரு கொள்கைபடி நடந்து கொள்ள உரிமை உள்ளது. அதுபோல், மதிமுகவுக்கு அதற்கென ஒரு கொள்கைபடி நடந்து கொள்ள உரிமை உள்ளது. அதற்காக, கூட்டணியில் கருத்து வேறுபாடு என்று சொல்ல முடியாது.


கரன் : நீங்க உங்க கொள்கையில் உறுதியாக உள்ளதாக சொல்கிறீர்கள். 1998-99 இல் பிஜேபி கூட்டணியில் இருந்தீர்கள். 2004 இல் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தீர்கள். 2006 இல் அதிமுகவுடன் இருக்குறீர்கள். நீங்கள் சட்டையை மாற்றுவது போல் கூட்டணியை மாற்றுவீர்களா?


வைகோ : நான் எனது அரசியல் பார்வையிலும் கொள்கையிலும் உறுதியோடு இருக்கிறேன்.

கரன் : ஆனால் எட்டு ஆண்டுகளில் மூன்று அரசியல் கட்சிகள் என்பதை எப்படி விளக்க போகிறீர்கள்?

வைகோ : நிறைய கட்சிகள் சந்தர்ப சூழ்நிலையால் கூட்டணி மாறியுள்ளன. இங்கே, இது எங்கள் கட்சி தொண்டர்கள், தலைமை என்று மொத்த கட்சி நிர்வாகமும் செயல் கூட்டத்தில் சேர்ந்து எடுத்த முடிவாகும். நான் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவு இல்லை.

கரன் : இது நீங்கள் கூடி எடுத்த முடிவாக இருக்கலாம். ஆனால் இது நியாயமான முடிவு இல்லை. நீங்கள், 2002 இல் ஜெயலலிதாவை சர்வாதிகாரி என்று அழைத்தீர்கள். 2004 இல் திராவிட கோட்பாடுகளை அழிப்பதாக கூறினீர்கள்.

வைகோ : கருணாநிதி காங்கிரசை எவ்வாறு எல்லாம் தாக்கி உள்ளார்? எப்படி எல்லாம் மிசா திமுகவிற்கு எதிராக உபயோகப்படுத்த பட்டு உள்ளது. பின்பு எப்படி திமுகவும் காங்கிரசும் இணைந்தார்கள்?

கரன் : ஆனால் மற்றவர்கள் தான் பச்சோந்திகளாக இருந்தால் வைகோ வும் காற்று அடிக்கும் போது எல்லாம் திசையை மாற்றி கொண்டு பச்சோந்தியாக இருக்க வேண்டுமா?

வைகோ : இல்லை. இது அப்படி இல்லை.

கரன் : ஆனால் நீங்கள் அப்படிதான் இருக்குறீர்கள். 2004 இல் ஜெயலலிதாவுக்கு எதிராக குற்றம் சாட்டி விட்டு, 2006 இல் அவரை முதலமைச்சர் ஆக்க பிரச்சாரம் செய்கிறீர்கள். உங்களின் இந்த அரசியல் நிலைப்பாடு உங்களுக்கு உறுத்தலாக இல்லையா?

வைகோ : இது எங்களின் தொண்டர்களின் கருத்திற்கேற்ப எடுக்கப்பட்டது.

கரன் : இது எனக்கு ஒரு தவறான மன்னிப்பாக தெரிகிறது. இது நீங்க எடுத்த முடிவு இல்லை... தொண்டர்களுக்காக தான் அப்படி முடிவு எடுத்ததாக சொல்கிறீர்கள். நீங்கள் எடுத்த முடிவுக்காக உங்கள் தொண்டர்களை குறை கூறுகிறீர்கள்.

வைகோ : அவர்களின் முடிவை சரியானதாகவே ஏற்று கொள்கிறேன்.

கரன் : நீங்கள் இந்த சந்தர்ப வாத நிலைப்பாடுகளுக்கு வருத்தப்பட வில்லையா?

வைகோ : இந்தியாவில் அனைத்து கட்சிகளுமே இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறார்கள்.

கரன் : அப்ப நீங்க யாரையும் விட உயர்ந்தவர் இல்லை?

வைகோ : இல்லை.



பதிவு பெரிதாகி கொண்டே போவதால் சிதம்பரம், அன்புமணி ராமதாஸ், மோடி பேட்டிகளை இன்னொரு பதிவில் போடுகிறேன்.


சிலசமயங்களில் கரனின் கேள்விகள் எரிச்சலை மூட்டுவதற்காக கேட்க படுவது போலவே தோன்றும். ஆனால் கேள்விகளுக்காக அவர் சம்பந்த பட்டவரை பற்றிய தகவல்களை சேகரிக்கும் முயற்சிகள் வியப்பளிக்க கூடியவை.


தமிழிலும் இதுபோன்ற பேட்டிகள் எப்போது வரும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

2 comments:

சின்னப் பையன் said...

அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே? எரிப்பாங்க, உடைப்பாங்கன்னு...

வரணும்..தெஹல்கா போன்றவர்களும் மற்றும் கரன் மாதிரி கேள்வி கேட்போரும் தமிழ் நாட்டுக்கு வரணும்...

சரவணகுமரன் said...

ச்சின்னப் பையன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...