Monday, December 31, 2007

முன்னுதாரண பிரதமர்

3 ஆண்டுகளாக `லீவு' எடுக்காமல் மன்மோகன் சேவை * அரசு விடுமுறை நாட்களிலும் கூட சுறுசுறுப்பாக பணி சபாஷ்!

பிரதமராக பொறுப்பேற்றது முதல், மூன்று ஆண்டுகளாக பிரதமர் மன்மோகன் சிங் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தது இல்லை.

அவருக்கு முன் பிரதமராக இருந்தவர்கள் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் மாத கடைசியில் சில நாட்கள் எங்காவது சென்று ஓய்வு எடுக்க விரும்புவர். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங், தொடர்ந்து வேலை செய்து வருவதையை தனது பொழுது போக்காக கொண்டுள்ளார். மன்மோகன் சிங் 2004ம் ஆண்டு மே 22ம் தேதி பிரதமராக பொறுப்பேற்றார்; பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது அவருக்கு 75 வயதாகிறது. இருப்பினும், ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தது இல்லை. வேலை, வேலை என எப்போது பார்த்தாலும் அவருக்கு வேலையை பற்றிய நினைப்பு தான். தினம், தினம் தன் மீது ஏராளமான பணிகளை திணித்து கொள்வது தான் அவருக்கு பிடித்தமான விஷயம்.

அவரது உதவியாளர்கள் கூறுகையில், `வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது கூட, பிரதமர் மன்மோகன் ஒரு நிமிடம் சும்மா இருக்க மாட்டார். தலைவர்களை சந்தித்த பிறகு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கூட, ஏதாவது ஒரு பணியை செய்து கொண்டு இருப்பார். மத்திய அரசு அதிகாரிகளுக்கு அரசு விடுமுறையாக ஆண்டுக்கு 17 நாட்களும், சாதாரண விடுமுறை நாட்கள் என 35 நாட்களும் உண்டு. இந்த விடுமுறை நாட்களில் மக்களை சந்திக்க பிரதமர், `அப்பாயின்மென்ட்' கொடுத்து விடுவார்.

மன்மோகன் சிங்குக்கு முன் பிரதமராக இருந்தவர் வாஜ்பாய். ஆறு ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். ஒவ்வொரு ஆண்டும், டிசம்பரின் கடைசி வாரத்தில் ஏதாவது ஒரு சுற்றுலா பகுதிக்கு சென்று விடுவார். புத்தாண்டை கொண்டாடி விட்டு தான் டில்லி திரும்புவார். இதே மாதிரி தான் மற்ற நாடுகளின் தலைவர்கள், டிசம்பர் மாத கடைசி நாட்களை விடுமுறைக்காக ஒதுக்கி விடுவர். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போதும் இதே நிலை தான். காங்கிரஸ் தலைவர் சோனியா தற்போது குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாட வெளியூர் சென்று விட்டார்.

ஆனால், பிரதமர் மன்மோகன் சிங், ஆண்டின் கடைசி நாட்களிலும், புத்தாண்டு துவங்கிய முதல் வாரத்திலும் வேலையில் தான் ஈடுபட்டு இருப்பார். பிரதமராக பதவியேற்ற 2004ம் ஆண்டின் இறுதி நாட்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை புறக்கணித்து விட்டு, சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமான் நிகோபார் தீவுகளையும், தென் மாநிலங்களின் கடற்கரை பகுதிகளையும் மன்மோகன் சுற்றி பார்த்தார். 2005 மற்றும் 2006ம் ஆண்டுகளின் முதல் வாரத்தில் முறையே ஐதராபாத் மற்றும் சென்னை நகரங்களுக்கு சென்று அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்தார்.

மன்மோகன் சிங்குக்கு முன் பலர் பிரதமர்களாக இருந்துள்ளனர். அவர்களுக்கு உதவியாளராக பணியாற்றியவர் தற்போது மன்மோகன் சிங் அலுவலகத்திலும் பணியாற்றி வருகிறார். மன்மோகன் சிங் போல, மற்ற எந்த பிரதமரும் நள்ளிரவு வரை பணியாற்றியது இல்லை என்று அந்த உதவியாளர் தெரிவித்துள்ளார்.

-- தினமலர் செய்தி

சபாஷ் பிரதமர்...

1 comment:

bala said...

ஆ ,நமது பிரதமர் சுறுசுறுப்பா வேலை செய்கிறாரா?எனக்கென்னவோ இவர் யாரோ சொன்ன படி "He shows, remarkable agility and bias for action like say, a bag of cement when kept in a corner" என்று தோன்றுகிறது.இவர் பேசாம வேலை செய்யாம இருக்கலாம்.நாடு முன்னேற வாய்ப்பு உள்ளது.

பாலா