Monday, December 31, 2007

முன்னுதாரண பிரதமர்

3 ஆண்டுகளாக `லீவு' எடுக்காமல் மன்மோகன் சேவை * அரசு விடுமுறை நாட்களிலும் கூட சுறுசுறுப்பாக பணி சபாஷ்!

பிரதமராக பொறுப்பேற்றது முதல், மூன்று ஆண்டுகளாக பிரதமர் மன்மோகன் சிங் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தது இல்லை.

அவருக்கு முன் பிரதமராக இருந்தவர்கள் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் மாத கடைசியில் சில நாட்கள் எங்காவது சென்று ஓய்வு எடுக்க விரும்புவர். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங், தொடர்ந்து வேலை செய்து வருவதையை தனது பொழுது போக்காக கொண்டுள்ளார். மன்மோகன் சிங் 2004ம் ஆண்டு மே 22ம் தேதி பிரதமராக பொறுப்பேற்றார்; பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது அவருக்கு 75 வயதாகிறது. இருப்பினும், ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தது இல்லை. வேலை, வேலை என எப்போது பார்த்தாலும் அவருக்கு வேலையை பற்றிய நினைப்பு தான். தினம், தினம் தன் மீது ஏராளமான பணிகளை திணித்து கொள்வது தான் அவருக்கு பிடித்தமான விஷயம்.

அவரது உதவியாளர்கள் கூறுகையில், `வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது கூட, பிரதமர் மன்மோகன் ஒரு நிமிடம் சும்மா இருக்க மாட்டார். தலைவர்களை சந்தித்த பிறகு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கூட, ஏதாவது ஒரு பணியை செய்து கொண்டு இருப்பார். மத்திய அரசு அதிகாரிகளுக்கு அரசு விடுமுறையாக ஆண்டுக்கு 17 நாட்களும், சாதாரண விடுமுறை நாட்கள் என 35 நாட்களும் உண்டு. இந்த விடுமுறை நாட்களில் மக்களை சந்திக்க பிரதமர், `அப்பாயின்மென்ட்' கொடுத்து விடுவார்.

மன்மோகன் சிங்குக்கு முன் பிரதமராக இருந்தவர் வாஜ்பாய். ஆறு ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். ஒவ்வொரு ஆண்டும், டிசம்பரின் கடைசி வாரத்தில் ஏதாவது ஒரு சுற்றுலா பகுதிக்கு சென்று விடுவார். புத்தாண்டை கொண்டாடி விட்டு தான் டில்லி திரும்புவார். இதே மாதிரி தான் மற்ற நாடுகளின் தலைவர்கள், டிசம்பர் மாத கடைசி நாட்களை விடுமுறைக்காக ஒதுக்கி விடுவர். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போதும் இதே நிலை தான். காங்கிரஸ் தலைவர் சோனியா தற்போது குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாட வெளியூர் சென்று விட்டார்.

ஆனால், பிரதமர் மன்மோகன் சிங், ஆண்டின் கடைசி நாட்களிலும், புத்தாண்டு துவங்கிய முதல் வாரத்திலும் வேலையில் தான் ஈடுபட்டு இருப்பார். பிரதமராக பதவியேற்ற 2004ம் ஆண்டின் இறுதி நாட்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை புறக்கணித்து விட்டு, சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமான் நிகோபார் தீவுகளையும், தென் மாநிலங்களின் கடற்கரை பகுதிகளையும் மன்மோகன் சுற்றி பார்த்தார். 2005 மற்றும் 2006ம் ஆண்டுகளின் முதல் வாரத்தில் முறையே ஐதராபாத் மற்றும் சென்னை நகரங்களுக்கு சென்று அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்தார்.

மன்மோகன் சிங்குக்கு முன் பலர் பிரதமர்களாக இருந்துள்ளனர். அவர்களுக்கு உதவியாளராக பணியாற்றியவர் தற்போது மன்மோகன் சிங் அலுவலகத்திலும் பணியாற்றி வருகிறார். மன்மோகன் சிங் போல, மற்ற எந்த பிரதமரும் நள்ளிரவு வரை பணியாற்றியது இல்லை என்று அந்த உதவியாளர் தெரிவித்துள்ளார்.

-- தினமலர் செய்தி

சபாஷ் பிரதமர்...

Sunday, December 30, 2007

பெங்களுர் அருகே ஒரு மலையேற்றம்


அலுவலக நண்பர்கள் எங்காவது trekking போகலாம்னு சொல்லும்போது களவாரஹள்ளி (kalavaarahalli) என்ற இடம் தெரியவந்தது. இது அவ்வளவாக யாரும் அறிந்த இடம் கிடையாது.





பெங்களூரில் இருந்து 2 மணி நேரம் தாம் ஆகும். காலை நாலு மணிக்கு கிளம்பி ஆறு மணிக்கு சேருவது இயற்கையை அனுபவிக்க சரியான நேரம்.





பெங்களூருக்கு வடக்கே ஹெப்பல் பாலத்தை கடந்து சென்றால் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் சிக்பெல்லாபூர் (Chikkabellapur) என்ற ஊர் வரும். அங்கிருந்து இடது பக்கம் திரும்பி பாபங்கினி மடம் (Papagni mutt) என்ற இடத்தை அடைய வேண்டும். இந்த இடத்திற்கு கேட்டு கேட்டு தான் செல்ல வேண்டும்.





அந்த ஊரில் ஒரு சிவன் கோவில் உள்ளது. அங்கு வண்டியை விட்டு விட்டு அதற்கு பிறகு மலையேறவேண்டியது தான்.





இங்க என்ன விசேஷம் என்றால் மலை உச்சியை அடைந்த பிறகு நாம் மேகங்களுக்கு மேல் இருப்போம். அங்கிருந்து சுற்றிலும் பார்ப்பது, நிஜமாகவே கண் கொள்ளாக் காட்சி தான்.





இங்க பனி மூட்டமா தெரியிதே... இந்த போட்டோ எல்லாம் எடுத்த டைம் காலை 10 மணி....



ஆர்வ கோளாறுல மட மட என்று யார் கிட்டயும் கேட்காம ஏற ஆரம்பிச்சுட்டோம். அப்புறம் தான் தெரிந்தது, நாங்க ஏறினது தப்பான வழின்னு.



அதுக்கு அப்புறம் உக்கார்ந்து, உருண்டு, செங்குத்தா எல்லாம் ஏறி ஒரு வழியா உச்சியை அடைந்தோம். :-)



மலை ஏறுனதுல வேர்த்தாலும் இயற்கையோட AC காத்துல ஒண்ணும் தெரியல.



எது வேணுமென்றாலும் நாம தான் கொண்டு போகணும். அங்க தண்ணீர் உட்பட எதுவும் கிடைக்காது.



பெங்களுர் பசங்க picnic மாதிரி போயிட்டு வர நல்ல இடம். உடம்புக்கு கொஞ்சம் வேலை கொடுத்த மாதிரியும் இருக்கும்.

Saturday, December 29, 2007

திருச்செந்தூர் போகலாம்... வாங்க...

ஒருநாள் திருச்செந்தூர் போகலாம்னு கிளம்பினேன். போனபோது எடுத்த புகைப்படங்களின் பகிர்தலே இந்த பதிவு. போன ரூட் : தூத்துக்குடி – திருச்செந்தூர்.

மொதல்ல இது ஒரு Dry ஆன ஏரியான்னு பொதுவா நினைப்பாங்க. ஆனா போற வழி எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகளா பார்த்திட்டு போகலாம்.



தூத்துக்குடில கடல் இருக்கு. உப்பளங்கள் இருக்கு. ஆனா உப்பு தயாரிக்க பயன்படுத்தற தண்ணிர், நிலத்தடி நீர்.


இப்ப நிறைய உப்பளங்கள் மூடப்பட்டு வருவதாக கேள்விப்பட்டேன்.



இப்படி உப்பளமாக இருக்குற வழி, சட்டுனு வாழைமரம் நிறைந்த வழியா மாறுது.




இதுக்கு தேவையான நீரை வழங்குவது, தாமிரபரணி ஆறு. இதன் கரையோரம் ஆத்தூர், ஏரல், உமரிக்காடுன்னு நிறைய ஊர்கள், கிராமங்கள் இருக்கிறது.




இங்க ஆறுமுகநேரி, காயல்பாட்டினம் போன்ற ஊர்களைக் கடக்கும் போது வழியெல்லாம் பச்சப்பசேலேன்னு வயல்வெளிகள் உள்ளது.


இங்க இருக்குற குலசேகரபட்டினம்ங்கற ஊர், தசரா திருவிழாவுக்குப் பிரபலம். அப்ப பல ஊர்களில் இருந்து விதவிதமான வேடங்களில் வரும் பக்தர்கள் இங்க உள்ள கோவிலில் கூடுகிறார்கள்.


திருச்செந்தூருக்கு முன்னால் உள்ள காயல்பட்டினம் என்ற ஊரில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கிறார்கள்.



திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த ஒரு முருகன் கோவில் மட்டும்தான் கடலோரத்தில் அமைந்துள்ளது.




கடலுக்கு மிகவும் அருகில் அமைந்து இருங்தாலும் சுனாமியின் போது இந்த கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த சமயம் கடல் உள்வாங்கி, கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரிந்தது.



சிலர் கடவுளை கோவில், சிலைகளில் காண்கிறார்கள். சிலர் இயற்கையில் கடவுளை காண்கிறார்கள். இந்த இரண்டு வகையினருக்குமே திருச்செந்தூர் மனத் திருப்தியைக் கொடுக்கும்.


இக்கோவிலைப் பற்றி மேலும் அறிய இங்கே (http://tiruchendur.org/) சொடுக்கவும்.

Friday, December 28, 2007

தங்கர்பச்சான் கதையை திருடியது யார் யார்?

இந்த வாரம் குங்குமத்துல தங்கர்பச்சான் பேட்டி வந்துருக்கு. அதுல உள்ள ஒரு கேள்வி பதில் இது.

கேள்வி: ஏற்கனவே மூணு தடவை 'ஒன்பது ரூபாய் நோட்டை' திருடி எடுத்திட்டாங்கன்னு மேடையிலயே சொன்னீங்க. எந்தந்த படங்கள்?

பதில்: மூணு பேர் என்கிட்ட என் கதையைப் படமாக்க உரிமை கேட்டதும், நான் மறுத்ததும், பிறகு உரிமை வாங்காமலேயே அதைப் படமா எடுத்திட்டதும் உண்மை. மீதியைத்தான் இப்போ நான் எடுத்திருக்கேன். பெற்ற பிள்ளைகளைப் போராடி வளர்த்து ஆளாக்கி, அவங்க வளர்ந்ததும் உதாசீனப்படுத்தபட்டு உயிரை விட்ட அப்பாக்கள் வந்த படங்களை நினைச்சுப் பாருங்க, உங்களுக்கே தெரியும்.

இப்ப எனக்கு நினைவுக்கு வர்றது, "தவமாய் தவமிருந்து". மிச்ச ரெண்டு படங்கள் எது எது?

ஆனால் ஆச்சர்யமான விஷயம், தங்கர் வழக்கம் போல கிழி கிழின்னு கிழிக்காம Hint எல்லாம் கொடுக்குறாரு. ஏற்கனவே தங்கரும் சேரனும் ஆனந்த விகடன்ல மோதிக்கிட்டாங்க. இப்ப இதுவா?

ரஜினி - பிரகாஷ்ராஜ் : ஒரு ஒப்பிடு!

இவுங்க ரெண்டு பேரையும் இப்ப ஒப்பிடுறதுக்கு என்ன வந்துச்சுன்னு கேக்குறிங்களா? ஒண்ணும் இல்ல... எனக்கு நேரம் போகல... அவ்வளவுதான்... உங்களுக்கும் நேரம் போகலைன்னா பாருங்க...

ரெண்டு பேரும் பிறந்தது கர்நாடகா. பொழைக்கறது தமிழ்நாடு... (ஆந்திராவுந்தான்...) ரெண்டு பேரும் முதல்ல நடிச்சது கன்னட படங்கள். அப்புறமா நடிச்சது தமிழ். ரெண்டு பேரையும் தமிழுக்கு கூட்டிட்டு வந்தது கே. பாலச்சந்தர். ரெண்டு பேருமே தமிழுல வில்லனாக, கதாநாயகனாக, குணச்சித்திரமாக, நகைச்சுவையாக நடிச்சி இருக்காங்க. படங்கள தயாரிச்சி இருக்காங்க...

ரஜினி பொதுவா படங்கள் தயாரிக்குறது, அவரோட முன்னாள் தயாரிப்பாளர்களுக்காக, இயக்குனர்களுக்காக, கஷ்டப்படும் நடிகர்களுக்காக. பிரகாஷ் ராஜ் தயாரிக்குறது, திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும், நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுக்கவும். ரெண்டுமே பாராட்டப்படவேன்டியது தான். ஆனாலும் அறிவு ஜீவிகளால் அதிகம் பாராட்டபடுவது பிரகாஷ்ராஜ் தான்.


ரெண்டு பேருமே குருவுக்காக படம் தயாரிச்சி இருக்காங்க (முத்து, பொய்). ஒண்ணு வெற்றி பட சமாச்சாரங்களோடு வந்து ஒரு ரஜினி படமா ஓடிச்சி...இன்னொன்னு குருவே இயக்கி வெளி வரவே ரொம்ப கஷ்டபட்டுச்சி... என்னதான் குரு லாபமடஞ்சாலும் மக்கள் (ரஜினியே) அதிகம் பாராட்டுனது பிரகாஷ்ராஜைதான்.


ரெண்டு பேருமே வெளிப்படையா பேசுரவுங்க... உதாரணத்துக்கு ரஜினி தான் குடிச்சிட்டு ஷூட்டிங் வந்து திட்டு வாங்குனத எல்லாம் சொல்லுவாரு... அதே மாதிரி தான் பிரகாஷ் ராஜும். இது போல் எக்கச்சக்க மேட்டர்கள எல்லாம் ஆனந்த விகடன் தொடர்ல எழுதி இருந்தாரு.


ஆனா ரஜினி பேசும் போது பட்டும் படாம மத்தவங்க மனச நோகடிக்காம பேசுவாரு. பிரகாஷ் ராஜ் மனசுல பட்டதா அப்படியே சொல்லுவாரு. உதாரணத்துக்கு, இந்த பதிவ ரஜினி படிச்சா " Good... நல்ல இருக்கே... என்ன பண்ணிட்டு இருக்கிங்க... work ரொம்ப முக்கியம்... நல்லா பண்ணுங்க.." ன்னு சொல்லுவாரு. பிரகாஷ் ராஜ் னா, "உனக்கு வேற வேல இல்லையா... உருப்படியா எதாச்சும் பண்ணு" ன்னு சொல்லுவாரு... கரெக்ட்' தான்... வேலைய பார்ப்போம்... :-)

Wednesday, December 26, 2007

நதிகளை இணைக்கிறார் லாலு!!!

தண்டவாளம் அருகே 'பைப் லைன்' - லாபத்தை பெருக்க லாலு புது திட்டம்.




-தினமலர் செய்தி

Monday, December 24, 2007

வாத்தியார் நினைவு நாள் - ஒரு ப்ளாஷ்பேக்

இன்று எம். ஜி. ஆர். (மருதூர் கோபால இராமச்சந்திரன்) உயிர் நீத்த தினம். டிசம்பர் 24, 1987. உடல் நிலை சரியில்லாததால் 1984 ஆண்டு அமெரிக்கா கொண்டு செல்ல பட்டு பின்பு 1987 இல் இறந்தார். இவரது மரணத்தால் தமிழகமெங்கும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. கடைகள், திரையரங்குகள், பேருந்துகள் யாவும் சூறையாடப்பட்டன. இறுதி சடங்கின் போது ஏற்பட்ட வன்முறையால் 23 பேர் இறந்தனர். 47 போலீசார் காயமடைந்தனர். எம். ஜி. ஆரின் மரணத்தால் தமிழகத்தில் இயல்பு நிலை ஒரு மாதகாலம் பாதிக்கப்பட்டது. 30 தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

எம். ஜி. ஆர். 1917 இல் இலங்கை, கண்டியில் பிறந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த எம். ஜி. ஆர். வறுமையின் காரணமாக சினிமா துறையில் சேர்ந்தார். திரைத்துறையில் மிக பெரிய இடத்தை பிடித்த எம். ஜி. ஆர். காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்து பிறகு தி. மு. க. வில் இணைந்தார்.

பின்பு 1974 இல் லஞ்சத்தை முக்கிய காரணமாக கொண்டு திமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி (அதிமுக) தொடங்கினார். கருணாநிதி தனது மகன் முத்துவை எம். ஜி. ஆருக்கு எதிராக சினிமா நட்சத்திரமாக்க முயற்சி எடுத்ததும் ஒரு காரணமாக கூறப்பட்டது.

1977 இல் ஆட்சியை பிடித்த எம். ஜி. ஆர். தனது இறப்பு வரை நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று முதலயமைச்சராக ஆட்சியில் நீடித்தார். முதல் காங்கிரஸ் அல்லாத திராவிட மத்திய அமைச்சர்கள், இவரின் கட்சியில் இருந்து வெற்றி பெற்று டெல்லி சென்றவர்களே.

இவரது 11 ஆண்டு கால ஆட்சி, மீண்டும் கொண்டு வரப்பட்ட "இலவச மதிய உணவு" போன்ற திட்டத்தால் புகழப்பட்டாலும், பெருவாரியான நடுநிலை விமர்சகர்களால் " திறமையற்ற நிர்வாகம், மோசமான ஆட்சி" என்றே விமர்சிக்கப்பட்டது.

ஆனாலும் இவர் மேல் உள்ள அபிமானத்தால் இன்றும் இவரை கடவுளாக வழிப்படும் மக்கள் தமிழகத்தில் உண்டு.

Tuesday, December 18, 2007

மாதவனுக்கு ஒரு கேள்வி

நடிகர் மாதவன் நடித்து தயாரித்து வெளியிட்டுயிருக்கும் படம் "எவனோ ஒருவன்". நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. டிவி'ல ஒரு சீன் பார்த்தேன். அதில கடைகாரர் கூல் டிரிங்க்ஸ்க்கு எக்ஸ்ட்ரவா ரெண்டு ரூபா கேக்குறாரு. கேட்டா கூலா இருக்கனும்ங்கரதுக்காக பிரிட்ஜல வைக்கணும், அதுக்கு கரண்டு சார்ஜுனு சொல்றாரு. மாதவன் பிரண்டும் ரெண்டு ரூபா கொடுக்க, அதுக்கு மாதவன் சண்ட பிடிக்குறாரு.

இந்த படம் சமுக கருத்த சொல்றதா சொல்றாங்க. இந்த படத்த தயாரிச்சதுக்காக மாதவன பாராட்டுறாங்க. இந்த சீன்ல கூல் டிரிங்கா அவங்க காண்பிக்குறது Pepsi. நம்ம மாதவன் தான் அதுக்கு விளம்பர மாடல். அதுல விளம்பரத்துக்கு நடிக்க சொல்லும் போது, அத தயாரிக்க ஒரு ரூபா தான் செலவு ஆகுது, நீங்க எதுக்கு பத்து ரூபாய்க்கு விக்குறிங்கன்னு கேள்வி கேட்கல. பூச்சி மருந்து இருக்குன்னு சொன்ன பிறகும் மக்களே, இத வாங்கி குடிங்கன்னு விளம்பரம் பண்ணிட்டு, இப்ப அவரு எடுத்த படத்துல்ல ஒரு கடைக்காரன் கிட்ட ரெண்டு ரூபா சண்ட போட்டு கருத்து சொல்றாரு.

சார், இது என்ன நியாயம்?

Wednesday, December 12, 2007

கற்றது தமிழால் நொந்த கருணாஸ்

சமீபத்தில் திரைக்கு வந்த "கற்றது தமிழ்" படத்தின் விநியோகஸ்த உரிமையை நகைச்சுவை நடிகர் கருணாஸ் பெற்றிருந்தார். ஜீவா நடித்து புதுமுக இயக்குனர் ராம் இயக்கிய இப்படத்தை கதையை நம்பியும் இயக்குனரை நம்பியும் வாங்கியதாக தெரிகிறது. இப்படம் விமர்சகர்களிடே பாராட்டையும், ஐடி மற்றும் பிபிஒ துறையினரிடம் சர்ச்சையை கிளப்பி இருந்தாலும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.

இப்படத்தின் தாக்கம் அதிகம் உள்ள சென்னை, பெங்களூர் போன்ற ஊர்களிலும் இப்படம் அதிக நாள் ஓடவில்லை. இதனால் ரூபாய் 75 லட்சம் நஷடமடைந்ததாக கூறப்பட்டுள்ள நடிகர் கருணாஸ், இயக்குனருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். தனக்கு பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளதாகவும் அல்லது தன்னை கதாநாயகனாக கொண்டு ஒரு படத்தை இயக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு ராமின் பதில் என்னவென்று தெரியவில்லை.

Sunday, December 9, 2007

கல்லூரி - விமர்சனம்

காதல் பட வெற்றிக்கு பிறகு பாலாஜி சக்திவேல்-ஷங்கர் காம்பினேசனில் வந்திருக்கும் படம். தமன்னாவை (கேடி, வியாபாரி, சக்தி மசாலாவில் நடித்தவர்) தவிர அனைவரும் புதுமுகங்கள். கல்லூரிக்கால நண்பர்களை பற்றிய கதை. மிகவும் இயல்பாக எடுக்கப்பட்டு உள்ளது.

இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்பட்டுள்ள கல்லூரிகளுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள். தென் தமிழகத்தில் (சிவகங்கை என்று சொல்கிறார்கள்... ஆனால் திண்டுக்கல்லாம்...) உள்ள ஒரு கல்லூரியில் கதைக்களம் அமைக்கப் பட்டு உள்ளது. மற்ற படங்களில் வருவதை போல் கானா இல்லை... பெண்களை கேலி படுத்தும் பாடல் இல்லை...

நட்பு வட்டத்துக்குள் காதல் வந்தால் நண்பர்களுக்குள் எழும் உணர்ச்சிகளின் கதையே கல்லூரி. முத்து, ஷோபனா, கயல்விழி, ஆதிலட்சுமி, காமாட்சி என்று ஒவ்வொரு கதாபத்திரமும் மிக இயல்பாக வடிவமைக்க பட்டுள்ளது. அதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். உண்மையில் நடிகையான தமன்னாவை விட மற்றவர்கள் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

படத்துடன் ஒன்றிய நகைச்சுவை காட்சிகள் முதல் பாதி படத்தின் ஓட்டத்திற்கு கை கொடுத்து இருக்கிறது. அதிலும் "ஏங்க... நீங்க சொல்லுங்க" இரட்டையர்கள், கைடு விற்கும் ஆங்கில விரிவுரையாளர், வெட்க படும் காமாட்சி (பையன்தான்), பிடுங்கி சாப்பிடும் ஆதிலட்சுமி, தமன்னாவை டாவடிக்கும் சீனியர் என்று நகைச்சுவை காட்சிகள் படத்தை ஜனரஞ்சகமாக்குகிறது. தமன்னாவை போன்று தங்கள் தந்தைகளை டாடி என்று அழைக்கும் கற்பனை காட்சியும், கல்லூரி கல்சுரல் (கலை சாரல்) மாணவர்கள் ஆடும் வெஸ்டர்ன் நடனமும், பரத நாட்டியமும் அரங்கத்தை அதிர வைக்கிறது.

"பொண்ணை சக மனுஷியாகயும் friend ஆகவும் பாக்குறவனே ஆம்பிளை" வசனம் படத்தில் வரும் அனைத்து பெண்களையும் கண்ணியத்துடன் பார்க்க வைக்கிறது. ஆஸ்பிட்டலில் தமன்னா கோபம் படும் காட்சியில் நட்பை மீறிய காதல் யதார்த்தமாக வெளிப்படுகிறது. அண்ணனுக்காக படிப்பை விடும் குட்டி தங்கை தமன்னாவின் வண்டியில் உட்காராமல் முன்னால் ஓடியே வீட்டிற்கு கூட்டி செல்வது மனதை என்னவோ பண்ணுகிறது. நண்பர்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் காட்சிகள் கடந்த கால நினைவுகளை நினைவுப்படுத்தும்.

தமன்னா பிர்லா கல்லூரியில் கிடைக்கும் இடத்தை நண்பர்களுக்காக தவிர்ப்பது, எந்த வித அழுத்தமான காரணங்களும் இல்லாமல் வருவதால், ஒரு வித நாடகத் தன்மை ஏற்படுகிறது. "சரியா தவறா" பாடலை தவிர மற்றதெல்லாம் சுமார். தருமபுரி பஸ் எரிப்பை கிளைமாக்சில் பயன்படுத்திய விதம் படம் பார்போரின் மனதை பாரமாக்குகிறது.

ஷங்கர் வழக்கம் போல் தனது தயாரிப்புகளில் காட்டும் பிரமாண்டமான கஞ்சத்தனத்தை இதிலும் காட்டியுள்ளார். அதிகபட்ச செலவு ஒரு பஸ்ஸை எரித்ததே. ஆனாலும் தரமான, யதார்த்தமான படத்தை கொடுத்ததற்கு பாராட்ட வேண்டும். காதல் பட எதிர்பார்ப்பு இல்லாமல் இப்படத்தை கண்டால் ரசிக்கலாம்.

Thursday, December 6, 2007

பணம் செய்ய விரும்பு

அறம் செய்ய விரும்பு என்பதுதான் சரி. ஆனால் நல்லது செய்யவும் பணம் தேவையே? நமது சமூகத்தில் பொதுவாக ஏழைகளிடமும் நடுத்தர மக்களிடமும் பணக்காரர்கள் என்றால் ஏதோ கெட்டவர்கள் போலவும், பணம் இருந்தால் மன நிம்மதி போய்விடும் என்றும் சில எண்ணங்கள் உள்ளது. நல்ல வழியில் சம்பாதித்து நல்ல விஷயங்களுக்காக செலவிடப்படும் பணம் ஒரு தனிப்பட்ட மனிதனுக்கும், அவனின் குடும்பத்துக்கும், அவன் சார்ந்த சமூகத்துக்கும் நல்லதே ஆகும்.

நாம் ஏன் பணம் சம்பாதிக்க வேண்டும்? வேறு எவரிடமும் கை ஏந்தாமல் நமது சொந்த தேவைகளையும் குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளவும், சமூகத்துக்காக செலவிடவும் பணம் தேவை. இவ்வாறு ஒவ்வொருவரும் நல்ல முறையில் பணம் சம்பாதித்து சேமித்து வந்தால் அது அந்த நாட்டையே வளமாக்க உதவும்.

எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும்? சரி... இப்பொழுது நாம் ஒரு வேலைக்கு செல்கிறோம் அல்லது நாமே சொந்தமாக தொழில் செய்கிறோம். பணம் நமக்கு சம்பளமாகவோ அல்லது வருமானமாகவோ மாதந்தோறும் வருகிறது. அவரவர் வேலைகளுக்கு தகுந்தவாறு மாதம் ரூ. 2000 மோ, ரூ. 20,000 மோ, ரூ. 2,00,000 மோ சம்பாதிக்கலாம். யார் பணக்காரர்?.... ரூ. 2,00,000 வருமானம் பெறுபவரா?.... மாதம் ரூ. 2,00,000 வருமானம் பெறுபவர் ரூ. 2,50,000 செலவு செய்தால், அதேப்போல் ரூ. 20,000 வருமானம் பெறுபவர் ரூ. 10,000 மட்டுமே செலவு செய்தால், இப்பொழுது யார் பணக்காரர்?.

ரூ. 20,000 வருமானம் பெறுபவர், தான் செலவு செய்யும் பணம் போக மீதியை என்ன செய்கிறார் என்பதும் முக்கியம். ஒருவர் பணக்காரர் ஆவதை, அவர் சேமிப்பு என்று எதை நினைக்கிறார் என்பதையும், அவர் எவ்வாறு சேமிக்கிறார் என்பதையும் பொறுத்தே அமையும். ரூ. 2000 வருமானம் பெறுபவர் சிறப்பாக திட்டமிட்டு சிறந்த முறையில் சேமித்தால், முதலீடு செய்தால், அவரே மாற்ற இருவரை விட குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகலாம்.

ஆகவே ஒருவர் பணக்காரர் ஆவதை தீர்மானிப்பது ஒருவரது வருமானம் மட்டும் அல்ல, அவரின் செலவிடும் பழக்கமும், அவரின் சேமிக்கும் பழக்கமுமே ஆகும். சரி, இப்போது, பணத்தை எப்படி செலவிடுவது?... எப்படி சேமிப்பது?...


அடுத்த பதிவில்...


-- பணம் செய்யலாம்.


Wednesday, December 5, 2007

அமைதியான மனம் வேண்டுமா?

1) கேட்டாலோலிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள்

பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவயே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம்.

2) மறக்கவும்... மன்னிக்கவும்...

இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல், மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள்.

3) பாராட்டுக்காக ஏங்காதீர்கள்

உலகம் தன்னலம் பார்ப்பவர்களால் நிரம்பப்பட்டது. அவர்கள் எந்த காரியமும் அன்றி மற்றவர்களை புகழ மாட்டார்கள். இன்று உங்களால் ஏதேனும் ஆக வேண்டுமென்றால் உங்களை போற்றுபவர்கள், நாளை உங்களை கண்டுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் அதிகாரத்தில் இல்லையென்றல் உங்கள் முந்தைய சாதனைகளை மறந்து உங்களிடம் குறை கூறுவார்கள். இதற்காக நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்?. நீங்கள் வருத்தப்பட வேண்டிய அளவுக்கு அவர்கள் பாராட்டு ஈடானதல்ல. உங்கள் வேலையை நீங்கள் சிறப்பாகவும் நேர்மையாகவும் செய்யுங்கள். அதற்கான பலன் உங்களைத் தேடி வரும்.

4) பொறாமைப்படாதீர்கள்

நாம் எல்லோருக்குமே பொறாமை எந்தளவுக்கு மனநிம்மதியை சீரழிக்கும் என்று தெரியும். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் பதவி உயர்வு உங்களுக்கு வராமல் உங்கள் நண்பர்களுக்கு செல்லலாம். பல வருடங்களாக போராடியும் தொழிலில் நீங்கள் அடையாத வெற்றி புதியதாக தொழில் தொடங்கியோருக்கு கிடைக்கலாம். அதற்காக அவர்கள் மேல் பொறாமைப் படலாமா? கூடாது. ஒவ்வொருவருமே வாழ்க்கையில் அவர்க்களுக்கான நிலையை அடைவார்கள். மற்றவரை பொறாமைப் பட்டு வாழ்வில் எதுவும் ஆக போவதில்லை, உங்கள் மன நிம்மதியை இழப்பதை தவிர.

5) சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுங்கள்

தன்னந்தனியாக நின்று சூழ்நிலையை மாற்ற நினைபீர்களிலானால் நீங்கள் தோற்ப்பதர்க்கான வாய்ப்புகளே அதிகம். அதற்கு பதிலாக நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறவேண்டும். அவ்வாறு மாறுவீர்களானால் சுற்று வட்டாரம் உங்களை ஏற்று, உங்களுடன் ஒன்றி, உங்களுக்கு ஏற்றவாறு மாற தொடங்கும்.

6) தவிர்க்க முடியாத காயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்

இது துரதிஷ்ட்டகரமான நிலைகளை சாதகமாக்கி கொள்ள உதவும் வழியாகும். நமது வாழ்நாளில் நாம் பல்வேறு வகையான சங்கடங்களை, வலிகளை, எரிச்சல்களை, விபத்துக்களை எதிர்க்கொள்ள நேரிடலாம். இவ்வாறான, நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிலைகளில், அவற்றுடன் வாழ கற்று கொள்ள வேண்டும். விதியின் திட்டங்களை சில நேரங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதன் மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால், நம்மால் எந்த சூழலையும் எதிர் கொள்ளக்கூடிய பொறுமையையும், மனவலிமையையும், மன ஊறுதியையும் பெறலாம்.

7) செய்ய முடிவதையே செய்யுங்கள்

இது எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது. பெரும்பாலான சமயங்களில் நாம் நம்மால் செய்ய முடிவதற்கு அதிகமான பொறுப்புகளை கவுரவத்துக்காக ஏற்று கொள்ள முயலுவோம். முதலில் நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எது நம்மால் முடியும், எது நம்மால் முடியாது என்று அறிந்து கொள்ள வேண்டும். அதிகப்படியான சுமையை ஏற்றுக்கொண்டு பின்பு ஏன் வருத்தப்பட வேண்டும்?. நம்முடைய வெளியுலக நடவடிக்கைக்களை அதிகரித்து கொண்டு நம்மால் உள்ளுக்குள் மன அமைதியை பெற முடியாது. நாம் நமது இயந்திரமயமான வேலை பளுவை குறைத்து கொண்டு, தினமும் சில நேரங்களை பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றில் செலவிட வேண்டும். இது நம்முடைய ஓய்வற்ற எண்ணவோட்டத்தை குறைக்கும்.

8) தினமும் தியானிங்கள்

தியானம் மனதை சாந்தப்படுத்தி உங்களை தொந்தரவு செய்யும் எண்ணங்களிலிருந்து விடுதலை செய்யும். இதுவே மன அமைதியின் உட்சநிலையை அடைய உதவும். முயற்சி செய்து இதன் பலனை அடையுங்கள். தினமும் அரை மணி நேரம் முழுமையாக தியானம் செய்தால், மீதி இருப்பத்தி மூன்றரை மணி நேரமும் அமைதியை உணரலாம். தியானத்தை நேரத்தை வீணாக்கும் ஒன்றாக நினைக்காமல் அதை தினந்தோறும் செய்து வந்தால், அது அன்றாட வேலைகளில் நமது செயல் திறனை அதிகரித்து வேலைகளை சிறப்பாகவும் விரைவாகவும் செய்ய உதவும்.

9) மனதை இருட்டறையாக்கதீர்கள்

நமது மனம் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் அதில் கெட்ட எண்ணங்கள் புகும். அதற்கு வாய்ப்பு இல்லாமல் நல்ல விஷயங்களில் நமது மனதை ஈடுப்படுத்த வேண்டும். நமக்கேற்ற நமது விருப்பத்திற்கேற்ற பொழுதுபோக்கும் காரியங்களில் நேரத்தை செலவிடலாம். நமக்கு பணம் முக்கியமா அல்லது மன அமைதி முக்கியமா என்று முடிவு எடுக்க வேண்டும். சமுக சேவை, இறை சேவை போன்றவை நமக்கு செல்வத்தை கொடுக்காது. ஆனால் மன நிறைவையும் திருப்தியும் கொடுக்கும். உடல்ரீதியான் ஓய்வெடுக்கும் போதும் ஆரோக்கியமான விஷயங்களை படித்தல், கடவுள் நாமத்தை உச்சரித்தல் போன்றவற்றை செய்யலாம்.

10) காரியத்தை தள்ளிப்போட்டு பின்பு வருந்தாதீர்கள்

இதை செய்யலாமா செய்யக்கூடாதா என்று தேவை இல்லாமல் வீண் விவாதம் செய்து நேரத்தை வீணாக்குவதை தவிர்க்கவேண்டும். வாழ்க்கையில் யாராலும் எதிர்காலத்தை சரியாக கணித்து முழுமையான திட்டத்துடன் வாழ முடியாது. நம்மிடம் உள்ள நேரத்திற்கு ஏற்றாற்போல் திட்டமிட வேண்டும். நாம் நமது தப்புகளிலிருந்து பாடம் கற்று கொள்ளலாம். அடுத்தமுறை அது போன்ற காரியங்களில் வெற்றி கொள்ளலாம். இந்த வேலையை நாம் செய்யவில்லை என்றோ இந்த வேலையை நாம் சரியாக செய்யவில்லை என்றோ வருத்தப்பட்டு ஒன்றும் ஆக போவதில்லை. கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டுமே ஒழிய வருத்தப்பட கூடாது.

- இணையத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது